சிங்கப்பூரில் ஏப்ரல் மாதம் புதிய தனியார் வீடுகளின் விற்பனை இரட்டிப்பானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஒரு மாதத்தில் மட்டும் 1,548 வீடுகள் விற்கப்பட்டன. இது ஆறு மாதங்களில் ஆக அதிகமான எண்ணிக்கை. இதில் எக்சகியூட்டிவ் கொண்டோமினிய வீடுகள் சேர்க்கப்படவில்லை.
புதிய தனியார் வீடுகளின் விற்பனை ஆண்டுக்காண்டு அடிப்படையில் 129 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும், மார்ச் மாதத்தைக் காட்டிலும் 19.1 விழுக்காட்டு வீடுகள் அதிகமாக விற்கப்பட்டதாக நகர மறுசீரமைப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை (மே 15) தெரிவித்துள்ளது.
அது வெளியிட்டுள்ள தரவுகளில், மார்ச் மாதம் 1,300 புதிய தனியார் வீடுகள் விற்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எக்சகியூட்டிவ் வீடுகளையும் சேர்த்துக் கணக்கிடுகையில் விற்பனை ஆன புதிய வீடுகளின் எண்ணிக்கை 1,649. அதேநேரம், 1,426 வீடுகளுக்கான விற்பனை ஏப்ரலில் தொடங்கி உள்ளது.
2025 ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், 771 வீடுகள் விற்கப்பட்டன; 1,344 வீடுகளுக்கான விற்பனை தொடங்கியது.
2026 மார்ச் மாதம் 1,937 வீடுகள் விற்கப்பட்ட அதேவேளை 1,615 வீடுகளின் விற்பனை தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
மத்திய வட்டாரத்திற்கு வெளியிலேயே புதிய தனியார் வீடுகளுக்கான தேவை அதிகமாக இருந்தது.
ஏப்ரல் மாதம் விற்பனை ஆன வீடுகளில் 87.7 விழுக்காடு அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவை.
‘தெங்கா கார்டன் ரெசிடென்சஸ்’ மற்றும் ‘வேலா பே’ ஆகிய புதிய கட்டுமானத் திட்டங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இந்த வலுவான நிலைக்கு உறுதுணை புரிந்தது.
ஏப்ரல் மாத வார இறுதிகளில் தொடங்கப்பட்ட அந்த இரு திட்டங்களின் வாயிலாக 1,220க்கும் அதிகமான வீடுகள் விற்பனை ஆயின. அவற்றில் ‘தெங்கா கார்டன் ரெசிடென்சஸ்’ திட்ட வீடுகளின் சராசரி விலை, சதுர அடிக்கு $2,210 ஆக இருந்தது.
அதேபோல, பேஷோர் வட்டாரத்தின் முதல் தனியார் குடியிருப்புத் திட்டமான ‘வேலா பே’யில் இடம்பெற்ற வீடுகளி சராசரி விலை, சதுர அடிக்கு $2,886.

