சிங்டெல்லின் துணை நிறுவனமான என்சிஎஸ் (National Computer Systems), ஏழு ஆண்டுகளாகத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்த திரு இங் குவோ பின், வரும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று அப்பொறுப்பிலிருந்து விலகுவார் என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) அன்று அறிவித்தது.
அவருக்குப் பதிலாக என்சிஎஸ்சின் துணைத் தலைமை நிர்வாகியும் அரசாங்க உத்திபூர்வ வர்த்தகக் குழுவின் தலைவருமான திரு சேம் லியூ நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என்சிஎஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
திரு லியூ தற்போது கரையோரப் பூந்தோட்டத்தின் இயக்குநர் சபை உறுப்பினராகவும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் வாரிய ஆளுநராகவும் பணியாற்றுகிறார்.
கூடுதலாக, அவர் சிங்கப்பூர் மேலாண்மைப் பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தகவல் அமைப்புப் பள்ளியின் வாரியத்திலும் உள்ளார்.
மேலும் சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் கணினிப் பள்ளித் துணைத் தலைவராகவும், சிங்கப்பூரின் தகவல் தொழில்நுட்பத் தரநிலைகள் குழுவின் மன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
தலைமை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகும் திரு இங், 2019ல் என்சிஎஸ்சின் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
மேலும், 2021ல் சிங்டெல்லின் நிர்வாகக் குழுவுக்கு நியமிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
திரு இங்கின் தலைமைத்துவத்தின்கீழ் சிங்டெல் குழுமத்தின் முக்கிய வளர்ச்சி இயந்திரமாக என்சிஎஸ் உருவெடுத்தது என்று சிங்டெல் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யுயென் குவான் மூன் தெரிவித்தார்.

