சோல்: தென்கிழக்காசியாவிலும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளிலும் ‘சாம்சுங் இலெக்டிரானிக்ஸ்’ (Samsung Electronics) நிறுவனம் அதன் ஊழியர்களை ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மொத்த ஊழியரணியில் சுமார் 10 விழுக்காட்டினரைப் பாதிக்கக்கூடும். வெளிநாடுகளில் உள்ள துணை நிறுவனங்கள் சிலவற்றில் ஆட்குறைப்பு இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
தென்கொரிய நிறுவனமான ‘சாம்சுங்’, வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 147,000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. மிக அண்மைய நீடித்த நிலைத்தன்மை அறிக்கையின்படி, நிறுவனத்தின் மொத்த ஊழியரணியான 267,800ல் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை பாதிக்கு மேல் என்று அறியப்படுகிறது.
இதற்கிடையே, அதன் சொந்த நாட்டில் எவ்வித ஆட்குறைப்பும் சாம்சுங் செய்யத் திட்டமில்லை என்று தெரிகிறது.
சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த சாம்சுங் ஊழியர்கள், மனிதவள மேலாளர்களுடன் அக்டோபர் 1ஆம் தேதி தனிப்பட்ட சந்திப்புகளுக்கு அழைக்கப்பட்டனர்.
ஆட்குறைப்பு தொடர்பாகவும் அதற்கு ஈடாக வழங்கப்படும் தொகுப்புத்திட்டத்தின் விவரங்கள் குறித்தும் ஊழியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.
உலகிலேயே கணினி நினைவுச் சில்லுகள், திறன்பேசிகள் ஆகியவற்றைப் பேரளவில் தயாரிக்கும் சாம்சுங் நிறுவனத்தின் பங்குகள் 2024ஆம் ஆண்டு 20 விழுக்காட்டுக்கும் அதிகமாகச் சரிந்தன.
செயற்கை நுண்ணறிவுக்காகப் பயன்படுத்தப்படும் கணினி நினைவுச் சில்லுகளைத் தயாரிக்கும் ‘எஸ்கே ஹைனிக்ஸ்’ நிறுவனத்தால் சாம்சுங் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சாம்சுங் நிறுவனத்தை நிறுவியவரின் பேரன் ஜே வொய்.லீ, 56, தற்போது நிர்வாகத் தலைவராக உள்ளார். புதிதாக உதித்துள்ள இந்தச் சவால்களுக்கு இடையே நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இவருக்கு.
அண்மையில் இந்தியாவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் சுமார் 10% ஊழியர்களை சாம்சுங் ஆட்குறைப்பு செய்ததாகக் கூறப்படுகிறது.