குப்பையில் தவறுதலாகப் போடப்பட்ட கைப்பேசியை மீட்ட துப்புரவு ஊழியர்

குப்பையில் தவறுதலாகப் போடப்பட்ட கைப்பேசியை மீட்ட துப்புரவு ஊழியர்

2 mins read
48740277-98ed-4cfd-ac5c-d38ddb1440b2
கைப்பேசியை மீட்டுத்தந்த துப்புரவு ஊழியருடன் தம்படம் எடுத்துக்கொண்ட ஷாலினியின் தாயார் - படம்: shalzsaidwhat/TikTok
Google News Preferred Icon

வீட்டு மேசையைச் சுத்தம் செய்யும்போது அதன்மீது விரித்துப் போடப்பட்டிருந்த துணியுடன் தமது கைப்பேசியையும் சுருட்டி குப்பைத் தொட்டியில் ஒரு மாது தவறுதலாக வீசிவிட்டார்.

சுவா சூ காங்கில் நடந்த இச்சம்பவம் குறித்து மதர்ஷிப் ஊடகம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) செய்தி வெளியிட்டது.

அதுகுறித்து டிக்டாக் சமூக ஊடகத்தில் அந்த மாதின் மகள் ஷாலினி விவரங்களைப் பகிர்ந்தார். கைப்பேசியில் சேகரித்த முக்கியத் தொடர்பு எண்களையும் புகைப்படங்களையும் இழக்க நேரிடுமோ என அந்த மாது அஞ்சினார்.

தாயும் மகளும் உடனடியாக வீட்டின் கீழே சென்று, துப்புரவு ஊழியர்களைத் தேடினர். யாரையும் காணமுடியாததால், அவர்கள் கட்டடத்தின் அறிவிப்புப் பலகையில் இருந்த நகர மன்ற எண்களை அழைத்தனர்.

நகர மன்ற அதிகாரிகள், பத்து நிமிடங்களில் துப்புரவு ஊழியர் அங்கு வருவார் என்று உறுதி செய்தனர். அதேபோல அங்கு வந்தடைந்த துப்புரவு ஊழியர், குப்பைத் தொட்டியைத் திறந்து அதற்குள் இருந்த பொருள்களைக் கிளறியபோது வீசப்பட்ட மேசைத்துணி தென்பட்டது.

அதிலிருந்த கைப்பேசியை மீட்டு, மாதிடமும் மகளிடமும் துப்புரவு ஊழியர் வழங்கினார். நல்லவேளையாக அந்தத் தொட்டி, இரண்டு வீடுகளின் குப்பைகளை மட்டும் சேகரித்து இருந்ததால் கைப்பேசியை மீட்பது எளிதாக இருந்தது.

துப்புரவு ஊழியரின் வேலை அவ்வளவு இனிதாக இல்லாத ஒன்றாக இருப்பினும் அவர் மிகவும் கனிவாக நடந்துகொண்டதாக மகள் ஷாலினி தெரிவித்தார். எந்த வார்த்தையும் பேசாத அவர், புன்னகையுடன் அவரது பணியை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

தாயார் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அந்த ஊழியர் எவ்வளவோ மறுத்தும் அவரைக் கட்டாயப் படுத்தி சிறிது பணத்தை அன்புப் பரிசாக வழங்கியதையும் ஷாலினி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
கைப்பேசிசுவா சூ காங்மாதுதாய்நகர மன்றம்உதவிவெளிநாட்டு ஊழியர்துப்புரவுபணியாளர்