சிங்கப்பூரின் குறுந்தொலைவு விரைவோட்ட வீராங்கனை சாந்தி பெரேரா, 30, வழக்கறிஞரும் சிங்கப்பூர் தேசிய அணியின் முன்னாள் விளையாட்டாளருமான டான் ஸோங் யாங், 32, இருவரும் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளனர்.
சனிக்கிழமை (நவம்பர் 21), தூய லூர்து அன்னை தேவாலயத்தில் இவர்களது திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளை உடையில் மணமகளும் வெளிர் மஞ்சள் நிற உடையில் மணமகனும் அழகாகக் காட்சியளித்தனர். திருமண நிகழ்ச்சியில் இருவரின் குடும்பத்தினர், நண்பர்கள் கலந்துகொண்டனர்.
வாள்வீச்சு வீராங்கனை அமிதா பெர்தியர், பூப்பந்து வீராங்கனை இயோ ஜியா மின், அவரது கணவரும் முன்னாள் தேசிய அணி நீச்சல் வீரருமான பாங் ஷெங் ஜுன் ஆகியோரும் பங்கேற்றனர். விரைவோட்ட வீரர் திமத்தி யாப், தடையோட்ட வீரர் ஆங் சென் சியாங் ஆகியோர் மணமகன் தோழர்களாக இருந்தனர்.
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்கள் 200 மீட்டர் தங்கப் பதக்கத்தைச் சாந்தி தக்கவைத்துக்கொண்டது நினைவுகூரத்தக்கது.
முன்னதாக, மூன்று ஆண்டுக் காதலுக்குப் பிறகு, 32 வயது டான் 2024 ஜூன் 9ஆம் தேதி சுவீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள டிராட்னிங்ஹோம் அரண்மனை அருகே சாந்தியிடம் திருமண விருப்பத்தைத் தெரிவித்தார்.
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள், 2025 தாய்லாந்துத் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் காரணமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு திருமணத்தை நடத்த இருவரும் முடிவுசெய்தனர். தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் சாந்தி 100 மீட்டர், 200 மீட்டர் தங்கப் பதக்கங்களைத் தக்கவைத்தார்.
இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி வெற்றிக்குப் பிறகு, தம்மோடு பயிற்சி செய்ய நேரம் ஒதுக்கிய டானுக்கு சாந்தி நன்றி தெரிவித்தார். டான், தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 400 மீட்டர் வெண்கலப் பதக்க வெற்றியாளராவார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் வெள்ளிப் பதக்கமும் வென்ற சாந்தி, தமது திருமண நிச்சயதார்த்தம் கடினமான ஆண்டில் வாழ்வில் மிகப்பெரிய ஒளியைக் கொடுத்ததாகவும் அதன் மூலம் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை ரசிக்கத் தாம் கற்றுக்கொண்டதாகவும் ஒலிம்பிக்ஸ்.காம் தளத்திடம் கூறினார்.
