இந்து அறக்கட்டளை வாரியப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கிறார் சரோஜினி பத்மநாதன்

2 mins read
279a98e3-0928-485c-bc8f-f86b31674bf8
இந்து அறக்கட்டளை வாரியம், திருவாட்டி சரோஜினி பத்மநாதனைப் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அறிவித்துள்ளது. - படம்: இந்து அறக்கட்டளை வாரியம்

இந்து அறக்கட்டளை வாரியம், திருவாட்டி சரோஜினி பத்மநாதனை அதன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. டிசம்பர் 24ஆம் தேதி திருவாட்டி சரோஜினி பொறுப்பேற்கிறார்.

வாரியத்தின் முதல் பெண் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெருமையையும் திருவாட்டி சரோஜினி பெறுகிறார்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் நிதிப் பிரிவு உறுப்பினராக இதற்குமுன் சேவையாற்றிய திருவாட்டி சரோஜினி, அரசாங்கம், பொதுச் சுகாதாரம், சமூகம் எனப் பல துறைகளில் அனுபவம் பெற்றுள்ளார்.

வாரியத்தில் இருந்தபோது நிதிப் பிரிவையும் நிர்வாக நடைமுறைகளையும் வலுப்படுத்த திருவாட்டி சரோஜினி உதவியதாக இந்து அறக்கட்டளை வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது.

வாரியம் நிர்வகிக்கும் நான்கு ஆலயங்கள், போதையர் மறுவாழ்வு இல்லம், அதன் திட்டங்கள் ஆகியவை குறித்தும் திருவாட்டி சரோஜினி நன்கு அறிந்தவர் என்று அறிக்கை சொன்னது.

சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பணியாற்றிய திருவாட்டி சரோஜினி, சுகாதார அமைச்சு, சுகாதார அறிவியல் ஆணையம் ஆகியவற்றில் மூத்த பொறுப்புகளையும் வகித்தார்.

1990களில் பொது மருத்துவமனைகளின் மறுநிர்மாணத்திலும் திருவாட்டி சரோஜினிக்கு முக்கியப் பங்கு இருந்தது.

2010ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை திருவாட்டி சரோஜினி சிண்டாவின் தலைமைச் செயலாக்க அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

அவரது தலைமைத்துவத்தின்கீழ் சிண்டா சிங்கப்பூரின் தரமான விருதையும் அறநிறுவனத் துறை வெளிப்படை விருதையும் பெற்றது.

அதிகம் நாடப்படும் மனிதவளப் பயிற்றுவிப்பாளருமான திருவாட்டி சரோஜினி, உள்ளூரிலும் புருணை, கத்தார், ஃபிஜி, கசக்ஸ்தான் ஆகிய நாடுகளிலும் தலைவர்கள் பலருக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்.

தொண்டூழியம் செய்வதில் அதிக நாட்டம் கொண்டுள்ள திருவாட்டி சரோஜினி, பெண்களையும் இளையர்களையும் முன்னேற்றுவதில் அதிகக் கவனம் செலுத்துகிறார்.

புதிய பொறுப்பு கிடைத்தது பெருமிதம் அளித்தாலும் அது மிகப் பெரிய பொறுப்பு என்று தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டார் திருவாட்டி சரோஜினி.

“அறக்கட்டளையை நிர்வகிப்பது சுலபமன்று. ஆனால் அதைத் திறம்படச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் மன உறுதியும் உள்ளது,” என்று திருவாட்டி சரோஜினி குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்