தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீவக வீட்டிற்கு வெளியே இருந்த நீராவிக் குளியலறை அகற்றம்

2 mins read
ee09d62f-afc2-4885-b671-50fcf3329f0f
முன்னதாக, மரத்தால் ஆன நீராவிக் குளியல் அறை ஒன்று சிராங்கூன் வீவக வீடு ஒன்றுக்கு வெளியே நிறுவப்பட்டிருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டுக்கு வெளியே உள்ள பொருள்களை அகற்றுவதற்காக அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டதை அடுத்து, இணையத்தில் பேசு பொருளாக இருந்த நீராவிக்குளியல் அறை ஒன்று அகற்றப்பட்டுவிட்டது.

சிராங்கூன் வட்டாரத்தில் உள்ள அந்த வீவக வீட்டுக்கு வெளியே, பல ஆண்டுகளாக வீட்டு உரிமையாளர் மரத்தால் ஆன நீராவிக்குளியல் அறை ஒன்றை வைத்திருந்தார்.

இந்த நீராவிக்குளியல் அறையைக் காட்டும் படம் ஒன்று இணையத்தில் வந்ததை அடுத்து, அதுகுறித்து இணையவாசிகள் காரசாரமாக விவாதிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி மரின் பரேட் நகர மன்ற ஊழியர்கள் நீராவிக்குளியல் அறைப் பகுதிகளைக் கட்டடக் கீழ்த்தளத்தில் கழற்றி, அங்கிருந்து எடுத்துச் சென்றதாக சாவ் பாவ் சீன நாளிதழ் தெரிவித்துள்ளது.

நீராவிக்குளியல் அறையை அகற்ற, வீட்டு உரிமையாளர் தங்களை அணுகியதாக நகர மன்றப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

வீவக கட்டடங்களில் அமைந்துள்ள பொது வெற்றிடங்களில் இத்தகைய பொருள்களை அனுமதிப்பது குறித்து இணையத்தில் பலரும் பலவாறாகக் கருத்து பதிவிட்டனர்.

சற்று உயர்த்தப்பட்ட தளம் ஒன்றின் மீது வைக்கப்பட்டுள்ள அந்த நீராவிக்குளியல் அறை, ஒரே நேரத்தில் பெரியவர் இருவரைக் கொள்ளும் அளவுக்கு உள்ளது. ஆனால், அது வெகுநாள் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, நகர மன்றத்துடன் வீட்டு உரிமையாளர் தொடர்பில் இருப்பதாகவும் அவரின் வீட்டு வெளியே உள்ள மற்றப் பொருள்களையும் அகற்ற அவர் உதவி கோரியுள்ளதாகவும் கூறப்பட்டது.

வீட்டுக்கு வெளியே 40க்கும் மேற்பட்ட தொட்டிகளில் செடிகளும் காணப்பட்டன. இந்தத் தொட்டிகள் பொதுமக்கள் செல்லும் பாதை அருகில் மிதிவண்டிகள், மெத்திருக்கை, அலமாரிகள் ஆகியவற்றோடு வைக்கப்பட்டுள்ளன.

வீட்டுக்கு வெளியே செடிகளைக் கொண்ட 40க்கும் மேற்பட்ட தொட்டிகள், அலமாரிகள், மிதிவண்டிகள், மெத்திருக்கை ஆகியவை உள்ளன.
வீட்டுக்கு வெளியே செடிகளைக் கொண்ட 40க்கும் மேற்பட்ட தொட்டிகள், அலமாரிகள், மிதிவண்டிகள், மெத்திருக்கை ஆகியவை உள்ளன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுவருக்கும் அலமாரிக்கும் நடுவில் இருந்த இடைவெளி சுமார் 1 மீட்டராகும்.

கடந்த சில ஆண்டுகளாக பொருள்களை அகற்றுமாறு அந்த வீட்டு உரிமையாளருக்கு நகர மன்றம் அறிவுறுத்தி வந்துள்ளதாகவும் இதற்காக அந்த மாது சிறிது முயற்சி எடுத்துள்ளதாகவும் அது தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்