எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் ஜோகூர் பாரு சுங்கத் துறைக் கட்டடத்தின் உயரக் கட்டுப்பாட்டுத் தடுப்பின் மீது மோதியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. வியாழக்கிழமை (ஆகஸ்ட் 7) காலை மோட்டார்சைக்கிள்களுக்கான தடத்திற்குள் பேருந்து தவறுதலாய்ச் சென்றதால் சம்பவம் நேர்ந்தது.
“நல்ல வேளையாக, ஓட்டுநர் உட்பட பேருந்தில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகளுக்கும் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கும் உண்டான சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேச்சாளர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
விசாரணையில் மலேசியக் காவல்துறையினருக்கு நிறுவனம் உதவிவருவதாகவும் அவர் சொன்னார்.
சம்பவத்தால் பேருந்துச் சேவை எவ்வளவு நேரம் தாமதமானது, பேருந்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் போன்ற விவரங்களைத் திருமதி ஃபூ தெரிவிக்கவில்லை.
சமூக ஊடகத்தில் பரவும் காணொளியில் பேருந்துச் சேவை எண் 170, உயரத் தடுப்பின்கீழ் இருப்பது தெரிகிறது.
சிங்கப்பூருக்கு வரும் திசையில் சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்பதைச் சாலை மீதிருக்கும் அம்புக்குறி கோடிகாட்டுகிறது.
மோட்டார்சைக்கிளோட்டிகள் பேருந்தைச் சுற்றித் தடத்தைக் கடந்துசென்றதையும் காணொளி காட்டியது.
எஸ்பிஎஸ் பேருந்துச் சேவை எண் 170, ஜோகூர் பாருவின் லார்க்கின் முனையத்துக்கும் சிங்கப்பூரின் ஜாலான் புசாருக்கு அருகில் உள்ள குவீன் ஸ்திரீட் முனையத்துக்கும் இடையில் இயங்குகிறது.

