ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிய பெண் தொடுத்த வழக்கு

எஸ்பிஎஸ் டிரான்சிட்டிற்கே ‘100% பொறுப்பு’: நீதிபதி

2 mins read
93d27c27-d46d-4326-b6da-77eadfc0ba28
ரயிலிலிருந்து இறங்க முற்பட்டபோது தடுமாறி விழுந்த மாது ஒருவரின் தலையும் கழுத்தும் ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டன. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வடக்கு-கிழக்கு ரயில் பாதையை இயக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம், பொங்கோல் எம்ஆர்டி நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்திற்கு ‘100 விழுக்காடு பொறுப்பு’ என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில், ரயிலிலிருந்து இறங்க முற்பட்டபோது தடுமாறி விழுந்த மாது ஒருவரின் தலையும் கழுத்தும் ரயில் கதவுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டன.

2022 ஜூன் 27ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தில், எஸ்பிஎஸ் டிரான்சிட்டின் அலட்சியத்திற்காக திருவாட்டி இங் லாய் பிங் என்ற அந்த மாது உரிமையியல் வழக்கு தொடுத்திருந்தார்.

ரயில் கதவுகளுக்கு இடையில் தாம் 12 நொடிகள் சிக்கிக்கொண்டதாக அவர் வாதிட்டார்.

ஆனால், அதிகபட்சம் ஓரிரு நொடிகள் மட்டுமே அவர் சிக்கியிருந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக எஸ்பிஎஸ் டிரான்சிட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த ரயில் சேவையிலிருந்து நிறுத்தப்படுவதாக பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்க எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என திருவாட்டி இங் கூறினார்.

ஆனால், அறிவிப்புகள் செய்யப்பட்டதாகவும் நிறுவனத்தின் செயல்பாட்டு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாகவும் எஸ்பிஎஸ் டிரான்சிட் வாதிட்டது.

இந்நிலையில், திருவாட்டி இங்கிற்குச் செய்ய வேண்டிய கடமையிலிருந்து எஸ்பிஎஸ் டிரான்சிட் தவறிவிட்டதாக ஆகஸ்ட் 13ஆம் தேதியிட்ட தீர்ப்பில் மாவட்ட நீதிபதி சிம் மெய் லிங் கண்டறிந்தார்.

அறிவிப்புகள் வெளியிடப்பட்டதற்கான சான்றுகளை எஸ்பிஎஸ் டிரான்சிட் நேரடியாக வழங்காததைச் சுட்டிய நீதிபதி, திருவாட்டி இங்கின் வாதத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்த ஊழியர் இருவரைச் சாட்சிகளாக அழைக்காததற்காக எஸ்பிஎஸ் டிரான்சிட்டிற்கு எதிராக நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்த அலட்சியம் காரணமாக திருவாட்டி இங் காயமடைந்தாரா என்பதையும் இழப்பீடாக வழங்கப்பட வேண்டிய தொகை எவ்வளவு என்பதையும் தீர்மானிக்க விசாரணை அடுத்த கட்டத்திற்குச் செல்லும்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய, எஸ்பிஎஸ் டிரான்சிட்டிற்கு 14 நாள் அவகாசம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்