காக்கி புக்கிட் வட்டாரத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 21) இரவு நிகழ்ந்த விபத்தில் எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
காக்கி புக்கிட் அவென்யூ 2 - காக்கி புக்கிட் ரோடு 1 சந்திப்பில் நிகழ்ந்த அந்த விபத்து குறித்து இரவு 11 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
உணர்வற்ற நிலையில் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 58 வயது பேருந்து ஓட்டுநர், அங்கு மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
காயமடைந்த ஐந்து பயணிகளும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 26க்கும் 38க்கும் இடைப்பட்ட வயதினர்.
அந்தப் பேருந்து சாலையில் சறுக்கியதாக நம்பப்படுகிறது என்று காவல்துறை தெரிவித்தது.
விபத்து நிகழ்ந்த வேளையில் அந்தப் பேருந்து 137 சேவை எண்ணைக் கொண்டிருந்ததாக எஸ்பிஎஸ் டிரான்சிட் பேச்சாளரான கிரேஸ் வூ கூறினார்.
உதவி மானப்பான்மை கொண்ட சிறந்த மனிதர் என்று ஓட்டுநரை அவர் புகழ்ந்தார். அவரது குடும்பத்திற்குத் தேவையான உதவிகளை தமது நிறுவனம் செய்து வருவதாகவும் திருவாட்டி வூ கூறினார்.
இதற்கிடையே, மரம் ஒன்றின் மீது மோதியதன் விளைவாக பேருந்தின் முன்பக்கம் நொறுங்கியதை இணையத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படம் ஒன்று காட்டியது.
தொடர்புடைய செய்திகள்
அந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.