புதிதாக அமையவிருக்கும் ஜூரோங் வட்டாரப் பாதையில் (JRL) சேவை வழங்க, எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனமும் பிரான்சைச் சேர்ந்த ‘ஆர்ஏடிபி டேவ்’ நிறுவனமும் கைகோத்துள்ளன.
புதிய கூட்டு நிறுவனமான ‘சிங்கப்பூர் ஒன் ரயில்’, ஒன்பது ஆண்டுகள் சேவை வழங்குவதற்கான ஏலக்குத்தகையை $750 மில்லியனுக்குப் பெற்றுள்ளது. சேவைக் காலம் மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வாய்ப்புண்டு.
கூட்டு நிறுவனத்தில் எஸ்பிஎஸ் டிரான்சிட் 75.01 விழுக்காட்டுப் பங்குகளை வகிக்கும். எஞ்சிய 24.99 விழுக்காட்டுப் பங்குகளை ஆர்ஏடிபி டேவ் வகிக்கும் என்று தெரிகிறது.
சிங்கப்பூர் ரயில்வே துறையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஈடுபடுவது இதுவே முதன்முறை.
கூட்டு நிறுவனம், சேவை வழங்குவதற்கான நியமனத்தைச் சென்ற ஆண்டு (2024) நவம்பரில் பெற்றது. அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக வடகிழக்கு ரயில் பாதை, செங்காங் பொங்கோல் இலகு ரயில் பாதை ஆகியவற்றின் தலைவரான ஆண்டனி மோக் பெங் ஃபாய் நியமிக்கப்பட்டுள்ளார்.
எஸ்பிஎஸ் டிரான்சிட் குழுமத் தலைமை நிர்வாகி ஜெஃப்ரி சிம், டௌன்டவுன் பாதைத் தலைவர் லீ யாம் லிம் இருவரும் இயக்குநர்களாகப் பணியாற்றுவர்.
இம்மூவருடன் ஆர்ஏடிபி டேவ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளையும் உள்ளடக்கிய ஏறத்தாழ 15 பேர் கொண்ட தலைமைத்துவக் குழு அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
சிங்கப்பூரின் ஏழாவது ரயில் பாதையான ‘ஜேஆர்எல்’, 2027ஆம் ஆண்டுக்கும் 2029ஆம் ஆண்டுக்கும் இடையில் கட்டங்கட்டமாகச் சேவை வழங்கத் தொடங்கும்.
தொடர்புடைய செய்திகள்
ரயில் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, வாடிக்கையாளர் அனுபவம் ஆகிய அம்சங்களில் அது உலகத்தரம் வாய்ந்த சேவையைப் பயணிகளுக்கு வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.