தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எம்ஆர்டி ரயிலில் $10,000 ரொக்கம் கண்டெடுப்பு; உரியவரிடம் வழங்கிய எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர்

2 mins read
1c6b66b8-b453-40d6-92fe-669ae27ba5e1
எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர் சோ சின் சாய் (இடது) அக்டோபர் 21ஆம் தேதி $10,000 ரொக்கம், ஒரு கடப்பிதழ், ஓர் அடையாள அட்டை அடங்கிய உறையை உரியவரிடம் திருப்பிக் கொடுக்கிறார். - படம்: எஸ்பிஎஸ் டிரான்சிட்/ஃபேஸ்புக்

ஹார்பர்ஃபிரண்ட் பெருவிரைவு ரயில் நிலையத்தில் எம்ஆர்டி ரயில் ஒன்றில், திங்கட்கிழமை (அக்டோபர் 21) இருக்கைகளுக்கு இடையே பழுப்பு நிற உறையில் ஏறத்தாழ $10,000 மதிப்பிலான ரொக்கம் இருந்ததைக் கண்டு எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒருவர் ஆச்சரியமடைந்தார்.

சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த உறையைக் கண்டறிந்த திரு சோ சின் சாய், 44, உடனே செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்புகொண்டார்.

அந்த உறையைப் பாதுகாப்பதற்காக, நிலைய ஊழியர்களிடம் அதை ஒப்படைக்குமாறு திரு சோ அறிவுறுத்தப்பட்டார் என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் திங்கட்கிழமை வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

அந்த உறையில் கடப்பிதழ் ஒன்றும் அடையாள அட்டை ஒன்றும் இருந்தன.

“தொகையின் மதிப்பைக் கண்டு நான் ஆரம்பத்தில் ஆச்சரியப்பட்டேன். ஆனால் அது பாதுகாப்பாக உரியவரிடம் திருப்பித் தரப்பட வேண்டும் என்பதே எனது முதல் எண்ணம். அதன் உரிமையாளருக்கு அது மிகவும் முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும்,” என்று திரு சோ கூறினார்.

ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மனவுளைச்சலுக்கு ஆளான பயணி ஒருவர், ரயிலில் பழுப்பு நிற உறையை விட்டுச் சென்றதை விளக்கி, அந்த உறையைக் கோருவதற்காக ரயில் நிலையத்திற்குச் சென்றார்.

எஸ்பிஎஸ் டிரான்சிட் ஊழியர்கள் அந்த உறை அந்தப் பயணிக்குச் சொந்தமானதா என்பதைச் சரிபார்த்து, உறுதிப்படுத்தி அதை உரியவரிடம் திருப்பிக் கொடுக்க திரு சோ அங்கு இருந்தார்.

“அவருக்கு மிகவும் தேவைப்படும்போது என்னால் உதவ முடியும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என திரு சோ பகிர்ந்தார்.

திரு சோவின் நேர்மைக்காக பல இணையவாசிகள் ஃபேஸ்புக் பதிவில் பாராட்டினர். அவரைப் போன்ற சேவை ஊழியர்களின் அன்பான செயல்களுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்