அரசு, வங்கி அதிகாரிகளாகப் பாசாங்கு செய்து மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 17 வயதுக்கும் 47 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
செப்டம்பர் 30ஆம் தேதிக்கும் அக்டோபர் 8ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நாடெங்கும் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் இந்த 35 பேரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து 16 வயது சிறுவன் உட்பட மேலும் 23 பேர் விசாரணையில் உதவி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 34 பேர், மோசடிக் குற்றங்களுக்காகத் தங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்ததாக நம்பப்படுகிறது.
குற்றச் செயல்களால் பெறப்பட்ட பணத்தைத் தமது வங்கிக் கணக்கில் போட 47 வயது ஆடவர் ஒருவர் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.
வங்கி, அரசு அதிகாரிகளைப் போல பாசாங்கு செய்து புரியப்படும் மோசடிக் குற்றங்கள் தொடர்பாகக் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து காவல்துறையிடம் பல புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்குக் காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.


