மோசடியில் $5.6 மில்லியன் இழப்பு: 255 பேரிடம் விசாரணை

மோசடியில் $5.6 மில்லியன் இழப்பு: 255 பேரிடம் விசாரணை

ஏறத்தாழ 660 மோசடிகளில் தொடர்பிருப்பதாகச் சந்தேகம்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

30 Jul 2026 - 6:20 pm

2 mins read

மோசடிச் சம்பவங்களில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் 255 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்துகிறது. அந்த மோசடிச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டோர் கிட்டத்தட்ட $5.6 மில்லியன் இழந்ததாகக் கூறப்படுகிறது.

ஜூலை 3ஆம் தேதி தொடங்கப்பட்ட புதிய மோசடி, இணையக் குற்றத் தடுப்புப் பிரிவான ‘சைபர் கமாண்ட்’, காவல்துறை வட்டாரப் பிரிவுகள் ஏழு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஜூலை 16 முதல் 29 வரை நடத்திய நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

அந்த 255 பேரும் மின்வர்த்தக மோசடி, தகவல் மோசடிக்கான இணைய முயற்சி, வேலைவாய்ப்பு, அரசாங்க அதிகாரிகள்போல் நடித்தல், முதலீடு, அதிர்ஷ்டக் குலுக்கல் மோசடி போன்ற 660க்கும் மேற்பட்ட மோசடிச் சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என வியாழக்கிழமை (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கையில் காவல்துறை தெரிவித்தது.

அவர்கள் 16 வயதுக்கும் 77 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் 172 பேர் ஆண்கள், 83 பேர் பெண்கள் என்றும் கூறப்பட்டது.

ஏமாற்று வேலை, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல், சட்டவிரோதக் கட்டணச் சேவை வழங்குதல் போன்றவற்றில் அவர்கள் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஏமாற்றுக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, $500,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

உரிமமின்றிப் பணப் பரிவர்த்தனைச் சேவை வழங்கினால் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ $125,000 வரையிலான அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

2025 டிசம்பர் 30 முதல், மோசடிக் கும்பல்களுடன் தொடர்புடையோருக்கு 6 முதல் 24 பிரம்படிகள் வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், அக்குற்றங்களில் உடந்தையாக இருப்போரின் வங்கிச் சேவைகள், கைத்தொலைபேசி இணைப்புகளுக்குக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
காவல்துறைமோசடிஇழப்புவிசாரணை