மின்விநியோகச் சேவை வழங்கும் எஸ்பி குழுமத்திடமிருந்து கட்டண பாக்கி அல்லது கூடுதலாகக் கட்டணம் செலுத்தியது குறித்து மின்னஞ்சல்களையோ குறுஞ்செய்திகளையோ பெற்றால், கவனமாக இருக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்கள் எஸ்பி குழுமத்தினர் என்ற போர்வையில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கு அதிகரித்திருப்பதாகக் காவல்துறை கூறியுள்ளது.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இதுவரை, இத்தகைய ஏழு மோசடிச் சம்பவங்கள் பதிவாயின. இச்சம்பவங்களில் மொத்தம் $12,000 இழப்பு ஏற்பட்டதாக நவம்பர் 7ஆம் தேதி காவல்துறை கூறியது.
பாதிக்கப்பட்டோர் ‘எஸ்பி குழுமத்திடமிருந்து’ மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்திகளைப் பெற்றனர். அவர்கள் கூடுதலாகக் கட்டணம் செலுத்தியிருப்பதாகவோ கட்டண பாக்கி இருப்பதாகவோ அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கட்டணத்தைச் செலுத்தவோ கூடுதல் தொகையைத் திரும்பப் பெறவோ ஒரு இணையத் தொடர்பு முகவரியை அணுகும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மின்னஞ்சலில், “முக்க்கியம்: இந்த இணையத்தொடர்பு முகவரி 24 மணி நேரத்துக்கு மட்டுமே செல்லுபடியாகும். உடனடியாகச் செயல்படவும்” என்று குறிப்பிட்டிருந்தது.
பாதிக்கப்பட்டோர் அதை உண்மை என்று நம்பி, தொடர்புகொண்டு தங்கள் தனிப்பட்ட விவரங்களையும் வங்கி அட்டை விவரங்களையும் அதில் பதிவு செய்தனர்.
தங்கள் அனுமதியின்றி வங்கிக் கணக்குகளிலிருந்து பணப் பரிமாற்றம் நடந்ததைத் தெரிந்துகொண்டபோதுதான் இந்த மோசடி குறித்து அவர்கள் புரிந்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய மின்னஞ்சல்களைப் பெற்றால், அதை அனுப்பியோரின் மின்னஞ்சல் முகவரிகளைச் சரிபார்க்கும்படிப் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.