சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத் தலைவர் டான் எங் சாயின் படத்தையும் பல்கலைக்கழகச் சின்னத்தையும் பயன்படுத்தி முதலீட்டு மோசடி விளம்பரம் ஒன்று இணையத்தில் வலம் வருவது கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் அதுகுறித்து அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (ஜனவரி 8) வெளியிட்டது.
என்யுஎஸ் ஆன்லைன் எஸ்ஜி (NusOnline SG) போன்ற போலி சமூக ஊடகக் கணக்குகளும் இணையத்தில் காணப்பட்டதைப் பல்கலைக்கழகம் அறிக்கையில் குறிப்பிட்டது.
பல்கலைக்கழகத்தின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்தி அந்தப் போலிக் கணக்குகள் பாடங்களை விளம்பரப்படுத்த முயல்கின்றன.
அத்தகைய மோசடிகளில் சிக்கி ஏமாறவேண்டாம் என்றும் தனிப்பட்ட விவரங்களைப் பகிரவேண்டாம் என்றும் பல்கலைக்கழகம் எச்சரித்தது.
அதுபோன்ற மோசடிகளைக் கண்டறிந்தால் உடனே ஸ்கேம்ஷீல்ட் தளம் வழியாகப் புகார் அளிக்கும்படியாகவும் பல்கலைக்கழகம் அறிவுறுத்தியது.
கடந்த ஆண்டு முற்பாதியில் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட அரை பில்லியன் வெள்ளிக்கும் மேற்பட்ட பணம், மோசடிகளில் பறிபோனதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

