தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
ஏமாற்று வேலையில் ஈடுபட வெளிநாட்டினரைச் சிங்கப்பூருக்கு மோசடிகாரர்கள் அனுப்புகின்றனர்

ஆப்பிள் ஸ்டோர், பெஸ்ட் டெங்கியைக் குறிவைக்கும் மோசடி கும்பல்

2 mins read
820c6e81-bbe8-4cc9-a1c3-be6993ef706b
வெளிநாட்டு மோசடிக் கும்பல்களுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டைச் சேர்ந்த 29 முதல் 36 வயதுக்குட்பட்ட மூவரைக் காவல்துறை நவம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கைது செய்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடன் அட்டையைப் பயன்படுத்தி ஆப்பிள் ஸ்டோர், பெஸ்ட் டெங்கி போன்ற சில்லறை விற்பனையாளர்களைக் குறிவைத்து, மோசடியில் ஈடுபட வெளிநாட்டினரைச் சிங்கப்பூருக்கு அனுப்பும் போக்கு அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

இது தீவு முழுவதும் உள்ள சில்லறை விற்பனையாளர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கப்பூரில் இணைய மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களின் கடன் அட்டை விவரங்களை மோசடிக்காரர்கள் திருடியதாக நம்பப்படுகிறது.

அந்த விவரங்களைத் தொடர்பில்லாக் கட்டணங்கள் செலுத்தும் முறையில் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு அவற்றை கைப்பேசி செயலி ஒன்றில் பதிவேற்றம் செய்து வெளிநாட்டிலிருந்து மோசடிக்காரர்கள் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

வெளிநாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிலேயே சமூக வலைத்தளங்கள் மூலம் ஏமாற்று வேலையில் ஈடுபட மோசடிக் கும்பல் தேர்ந்தெடுப்பதாக நம்பப்படுகிறது.

பின்னர், சிங்கப்பூருக்குள் நுழைந்து விலையுயர்ந்த கைப்பேசிகள், மின்னணுப் பாகங்கள், தங்கக் கட்டிகள் போன்ற பொருள்களைத் தொடர்பில்லாக் கட்டணம் செலுத்தும் முறையின் மூலம் வாங்க அவர்களுக்கு மோசடிக்காரர்கள் கட்டளையிடுகின்றனர்.

அந்தப் பொருள்களை மோசடிக் கும்பல் பணத்திற்காக விற்பனை செய்வர்.

அண்மை மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் ஒரே பாணியில் செயல்படுத்தப்பட்டன. ஆனால், ஏமாற்று வேலையில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாதம் 4ஆம் தேதியிலிருந்து இணைய வர்த்தக மோசடிகளால் குறைந்தது 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஐபோன்கள், நகைகள் போன்றவற்றையும் விலையுயர்ந்த மின்னணு பொருள்களை வாங்குவதற்காகத் தங்களின் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி மொத்தம் $100,000க்கும் அதிகமான அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகப் புகாரளித்துள்ளனர்.

வெளிநாட்டு மோசடிக் கும்பல்களுடன் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டைச் சேர்ந்த 29 முதல் 36 வயதுக்குட்பட்ட மூவரைக் காவல்துறை நவம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் கைது செய்தது.

அவர்களிடமிருந்து $20,000 ரொக்கம், நான்கு தங்கக் கட்டிகள், 27 ஐபோன்கள் மீட்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

மோசடிக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்