தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$348,000 மோசடி: முன்னாள் டிபிஎஸ் வங்கி மேலாளருக்குச் சிறை

2 mins read
5344c578-ccc9-4181-8188-fd2e8955f8b0
நல்ல லாபம் கிடைக்கும் என்று போலியான திட்டங்களை வாடிக்கையாளர்களிடம் கூறி பாங் மோசடி செய்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நான்கு வாடிக்கையாளர்களை 348,000 வெள்ளி மோசடி செய்த குற்றத்திற்காக முன்னாள் டிபிஎஸ் வங்கி மேலாளருக்கு 30 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாங் யூஹெங் என்னும் அந்த 28 வயது சிங்கப்பூரர் வங்கியின் நிதி மேலாளராக இருந்தபோது குற்றச் செயலில் ஈடுபட்டார்.

நல்ல லாபம் கிடைக்கும் என்று போலியான திட்டங்களை வாடிக்கையாளர்களிடம் கூறி அவர் மோசடி செய்தார்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்ற விசாரணையின்போது பாங் ஒப்புக்கொண்டார்.

பாங் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மோசடி செயலில் ஈடுபட்டார். பாங்கிற்குச் சூதாட்டப் பழக்கம் இருந்தது. அதனால் அவருக்குப் பெரிய கடன் சுமை ஏற்பட்டது. இதைச் சமாளிக்க அவர் மோசடியில் ஈடுபட்டார்.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பாங் நான்கு டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்களின் 348,000 நிதியைத் தமது வங்கிக் கணக்குக்கு மாற்றினார்.

வாடிக்கையாளர்களிடம் தங்கள் நிதிக்கு ஆண்டுக்கு 4 விழுக்காடு முதல் 12.88 விழுக்காடு வரை லாபம் கிடைக்கும் என்று பாங் கூறினார்.

தமது குற்றச்செயலை மறைப்பதற்காகச் சூதாட்டத்தின் மூலம் கிடைத்த 104,000 வெள்ளியை இரண்டு வாடிக்கையாளர்களிடம் அவர் திருப்பியும் தந்தார். இருப்பினும் அவர்களிடம் பாங் மீதத் தொகையான 98,000 வெள்ளியைத் தரவில்லை.

மற்ற இரண்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து பாங் 250,000 வெள்ளி ஏமாற்றினார். அதை டிபிஎஸ் வங்கி அவர்களிடம் வழங்கியது.

அதே நேரம் பாங் டிபிஎஸ் வங்கிக்கு 70,000 வெள்ளி கொடுத்தார். இருப்பினும் பாங்கின் செயலால் அந்த வங்கிக்கு 189,000 வெள்ளி இழப்பு ஏற்பட்டது.

பாங்கின் குற்றச் செயல் குறித்து 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டு தற்போது தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிடிபிஎஸ்மோசடி