சமூக ஊடகத்தில் அறிமுகமான ஒருவரின் அறிவுறுத்தலைக் கேட்டு, முதலீட்டு நிர்வாகி ஒருவர் ஒரு கிலோகிராம் தங்கக் கட்டியை விற்பனை செய்ய உதவியிருந்தார்.
அவர் தெரியாத நபரிடமிருந்து அந்தத் தங்கக் கட்டியைப் பெற்று, நகைக்கடைக்காரர் ஒருவரிடம் விற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கிடைத்த ரொக்கத்தை அவர் மின்னிலக்க நாணயங்களாக (cryptocurrency) மாற்றினார்.
சீனாவில் மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர் கொடுத்த பணத்தின்மூலம் அந்தத் தங்கக் கட்டி வாங்கப்பட்டதாக பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
ஜியாங் டஷங், 43, என்ற அந்த முதலீட்டு நிர்வாகிக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 6) ஐந்து மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சீனாவைச் சேர்ந்த அவர், மெய் சி ஹுய் என்பவருடன் 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி சமூக ஊடகத்தில் அறிமுகமானார்.
சிங்கப்பூரில் தங்கக் கட்டியை விற்று மின்னிலக்க நாணயங்களைப் பெற்றுக்கொள்ள தமது நண்பர் திட்டமிட்டதாக மெய் கூறியபோது, ஜியாங் அவருக்கு உதவ ஒப்புக்கொண்டார்.
அதே நாளன்று, ஆடவர் ஒருவரைச் சந்தித்து, தங்கக் கட்டியைப் பெற்றுக்கொள்ளுமாறு மெய் ஜியாங்கிடம் கூறினார். ஜியாங் மாலை 6 மணி அளவில், $114,626க்கான ரசீதையும் தங்கக் கட்டியையும் பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1ஆம் தேதி ஜியாங் அதனை சைனாடவுனில் உள்ள பீப்பிள்ஸ் பார்க் காம்ப்ளக்ஸில் இருக்கும் நகைக்கடைக்காரரிடம் $100,000க்கு விற்றார்.
தொடர்புடைய செய்திகள்
அதன் பிறகு, தெரியாத நபரிடம் இரண்டு முறை மின்னிலக்க நாணயங்களை மாற்றிவிடுமாறு மெய் அவரிடம் கூறினார். ஜியாங்கும் அவ்வாறே செய்தார். அந்தப் பரிவர்த்தனைகளுக்காக ஜியாங்கிற்கு $3,200 கிடைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜியாங் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.

