சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு மோசடிகளில் சிக்கியோர் ஒட்டுமொத்தமாக 1.1 பில்லியன் வெள்ளிக்கும் மேலான தொகையை இழந்தனர்.
இதற்குமுன் ஒரே ஆண்டில் இவ்வளவு தொகை மோசடி மூலம் பறிக்கப்படவில்லை.
கடந்த 2023ஆம் ஆண்டில் மோசடிகள் மூலம் $651.8 மில்லியன் பறிபோன நிலையில், அதற்கு மறுஆண்டு அதைவிட 70% கூடுதல் தொகை பறிபோனது என்று காவல்துறை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
சென்ற 2019ஆம் ஆண்டு முதல் $3.4 பில்லியனுக்கும் அதிகமான தொகையை சிங்கப்பூர்வாசிகள் மோசடிகளில் இழந்துள்ளனர்.
மோசடி தொடர்பில் ஆக அதிகமாக 2024ஆம் ஆண்டு 51,501 புகார்களைப் பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது. அதற்கு முந்திய ஆண்டில் இந்த எண்ணிக்கை 46,563ஆகப் பதிவானது.
மோசடிச் சம்பவங்களில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவற்றில் இழப்புத்தொகை 5,000 வெள்ளிக்கும் குறைவு. அதன் இடைநிலை அளவு கிட்டத்தட்ட $1,300 என்று காவல்துறை தெரிவித்தது.
சென்ற ஆண்டு இடம்பெற்ற மோசடிகளில் ஆக அதிகமானவை மின்வணிகத்தளம் வழியான விற்பனை தொடர்பானவை. அவ்வகையில் 11,665 மோசடிகள் இடம்பெற்றன. அவற்றால் மொத்தம் $17.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டோரில் இருவரில் ஒருவர், 30 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர். மின்வணிகத்தளம் வழியாக இடம்பெற்ற மோசடிச் சம்பவங்களில் பெரும்பாலானவை இசை நிகழ்ச்சிகள் தொடர்பானவை.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய மோசடிகளில், ஏமாற்றப்பட்டவர் நுழைவுச்சீட்டுக்குப் பணம் கட்டியதாக நினைப்பர். ஆனால், அந்த நுழைவுச்சீட்டு இறுதியில் அவர்களுக்குத் தரப்படமாட்டா அல்லது அவை போலி எனப் பின்னர் அறியப்படும்.
2024 மார்ச்சில், டெய்லர் சுவிஃப்ட் இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு விற்பனை தொடர்பாக பாதிக்கப்பட்டோரில் குறைந்தது 960 பேர் பத்தே வாரங்களில் 538,000 வெள்ளிக்கும் அதிகமான பணத்தை இழந்தனர்.
வேலை தொடர்பான மோசடிகளும் தொடர்ந்து கவலை அளிக்கக்கூடியதாக உள்ளன. இருந்தபோதும், அத்தகைய மோசடிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
வேலை தொடர்பான மோசடிகள் தொடர்பில் கடந்த ஆண்டு 9,000க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். அவர்கள் ஒட்டுமொத்தமாக 156.2 மில்லியன் வெள்ளியை இழந்ததைப் புள்ளிவிவரங்கள் காட்டின.
‘ஃபிஷிங்’ எனப்படும் இணையம்வழி தகவல் திரட்டும் மோசடிகள், ஆகக் கவலைக்குரிய மூன்று மோசடிகளில் தலையாயது. அவ்வகையில், 2024ல் $59.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டது. இது, அதற்கு முந்திய ஆண்டைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகம்.
மோசடிகளுக்கு ஆளானோரில் 70 விழுக்காட்டினர் 50 வயதிற்குட்பட்டவர்கள்.
அவ்வயதுப் பிரிவினரில் பெரும்பாலோர் மின்வணிகத்தள மோசடிகளுக்கு இலக்காகின்றனர். 50 வயதுக்கும் 64 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் பெரும்பாலும் ‘ஃபிஷிங்’ மோசடிகள் மூலம் பணத்தை இழக்கின்றனர்.
மின்னிலக்க நாணயங்கள் தொடர்பான இழப்பு, 2024ஆம் ஆண்டு பதிவான மொத்த இழப்புகளில் 24.3 விழுக்காடாக உள்ளது. இவ்விகிதம் 2023ல் கிட்டத்தட்ட 6.8 விழுக்காடாக இருந்தது.
பேரிழப்பு ஏற்படுத்திய சில சம்பவங்கள், 2024ல் மோசடிகளால் பறிபோன தொகையை ஒட்டுமொத்தமாக உயர்த்தியதாகக் காவல்துறை தெரிவித்தது. குறிப்பாக, நான்கு மோசடிச் சம்பவங்களால் மட்டும் $237.9 மில்லியன் இழப்பு ஏற்பட்டது.
கடந்த ஜூலையில், பொருள் விற்பனை தொடர்பான மின்னஞ்சல் மோசடியால் 57.2 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டதைக் காவல்துறை சுட்டியது.
தங்களது விநியோகிப்பாளர் ஒருவரது வங்கிக் கணக்கு விவரங்கள் மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்ட மின்னஞ்சல் ஒன்றை அந்த நிறுவனம் பெற்றதை அடுத்து, அது மோசடிக்கு இலக்கானதாக காவல்துறை தெரிவித்தது.
புதுப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்த வங்கிக் கணக்கிற்குக் கட்டணம் செலுத்திய பிறகுதான் அது மோசடிக் கணக்கு என்று அந்நிறுவனத்திற்குத் தெரியவந்தது.
அந்தப் போலி வங்கிக் கணக்கு தீமோர் லெஸ்டேவில் உருவாக்கப்பட்டதாக பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி எதிர்ப்புத் தளபத்தியம், இன்டர்போல், தீமோர் லெஸ்டே அதிகாரிகள் ஆகியோரின் கூட்டு நடவடிக்கையால் கிட்டத்தட்ட 42 மில்லியன் வெள்ளி மீட்கப்பட்டது. அதன் தொடர்பில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
நான்கு மோசடிச் சம்பவங்களில் மூன்றுக்கும் அதிகமானவற்றில் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளை மோசடிக்காரர்கள் நேரடியாக இயக்குவதில்லை.
பாதிப்பட்டவர்கள் தாங்களாவே தங்களது பணத்தை மோசடிக்காரர்களிடம் தரும் சம்பவங்களின் அதிகரிப்பு, ‘மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் மசோதா’விற்கு வித்திட்டது. அம்மசோதா இவ்வாண்டு ஜனவரியில் நாடாளுமன்றம் கூடியபோது சட்டமாக ஏற்கப்பட்டது.
தனிநபர்கள் ஏமாற்றப்படுவதாகச் சந்தேகம் எழக் காரணங்கள் ஏதும் இருந்தால், அவர்கள் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றுவதற்கான அதிகாரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறைக்கு அச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் மோசடி எதிர்ப்புத் தளபத்தியம், மோசடிகளால் இழக்கப்பட்ட 182 மில்லியன் வெள்ளிக்கு அதிகமான தொகையை மீட்டது. அத்துடன், குறைந்தது $483 மில்லியன் இழப்பையும் அது வெற்றிகரமாகத் தடுத்துள்ளது.
உதவிக்கான அழைப்பு எண்கள் மற்றும் இணைய வளங்கள்:
ஸ்கேம்ஷீல்டு உதவி எண்: 1799
மனநலக் கழகத்தின் மனநல உதவி எண்: 6389-2222
scamalert.sg
scamshield.org.sg