பண மோசடிக்கு உதவிய குற்றங்களுக்காக எச்சரிக்கை செய்யப்பட்டவர்கள், விசாரிக்கப்படுபவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்கள் அக்டோபர் மாதம் முதல் புதிய கைப்பேசி இணைப்புகளைப் பதிவு செய்யத் தடை விதிக்கப்படலாம்.
வங்கி மற்றும் அடையாள விவரங்களுக்கான அங்கீகாரச் சேவைகளைப் பெறவும் அவர்கள் தடை செய்யப்படலாம்.
மோசடிப் பேர்வழிகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் நாணய ஆணையம், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்கப்பூர் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (govtech) ஆகியவை இணைந்து இந்நடவடிக்கையை மேற்கொள்கின்றன.
சிங்கப்பூர் சட்டங்களின்படி, வங்கி, பணம் செலுத்துதல், அடையாள அட்டை அல்லது தொலைத்தொடர்பு நிறுவனக் கணக்குகள் போன்ற வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துவது பண மோசடிக்கு உதவிய குற்றங்களில் அடங்கும்.
மோசடிக்கு உதவும் இத்தகையவர்களிடம் இருந்து பெறும் வங்கிக் கணக்குகளை- அதாவது விரைவாகவும் எளிதாகவும் பணம் சம்பாதிக்க முற்படுபவர்களை மோசடிக்காரர்கள் பெரிதும் நம்பியிருப்பதாகப் புதன்கிழமை (செப்டம்பர் 17) அதிகாரிகளும் அரசாங்க அமைப்புகளும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
மோசடிக்காரர்களுக்கு உதவும் சேவைகளைத் தடுக்கும் வகையில், மோசடிக்கு உதவுவோருக்கு எதிராக உறுதியான, கடுமையான நடவடிக்கையைக் காவல்துறை எடுக்கவுள்ளது.
வங்கிகளுக்கு இடையேயும், நாட்டிற்கு வெளியேயும் மோசடி செய்யப்பட்ட பணத்தை மின்னணு முறையில் மாற்றிவிட வங்கிக் கணக்குகளைக் குற்றவாளிகள் பயன்படுத்தலாம். அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடிப்பது கடினம். இதில், இணைய வங்கிச் சேவை, உடனடி கட்டணச் சேவையான பேநவ், அட்டை அடிப்படையிலான பரிவர்த்தனைகள், தானியக்க வங்கி இயந்திரங்களிலிருந்து ரொக்கமாகப் பணம் எடுத்தல் ஆகியவை பொதுவான வழிமுறைகளாக உள்ளன.
பண மோசடிக்கு உதவும் குற்றத்தை மீண்டும் புரிந்தவர்களால் 11,000க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு எண்கள் 2025ல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
வங்கிச் சேவைகளை அணுகுவதற்கான கட்டுப்பாடுகள், புதிய தொலைபேசி இணைப்புக்குத் தடை அக்டோபர் முதல் நடப்புக்கு வரும். கார்ப்பாஸ், சிங்பாஸ் மீதான கட்டுப்பாடுகள் பின்னர் நடைமுறைக்கு வரும்.
அபாயங்களின் அடிப்படையில் தடைக்கான கால அளவும் கட்டுப்பாடுகளும் மாறுபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறையினரால் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யலாம்.
ஒரு குற்றத்தைப் புரிவதற்குத் துணைபுரியலாம் என்று அறிந்திருக்கும்போது அல்லது சந்தேகிக்கும்போது சிங்பாஸ் விவரங்களைக் கொடுப்பது, 2023ல் நடப்புக்கு வந்த புதிய சட்டம் குற்றமாக்கியது. சிங்பாஸ் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறை, $10,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.