கம்போடியாவிலிருந்து சிங்கப்பூரர்களைக் குறிவைத்து மோசடி: மேலும் ஒருவர் கைது

கம்போடியாவிலிருந்து சிங்கப்பூரர்களைக் குறிவைத்து மோசடி: மேலும் ஒருவர் கைது

2 mins read
7ec6a78c-6bd5-45a7-96b4-d14ee6b8e928
மலேசியாவில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிரான்சிஸ் டான் துவான் ஹெங். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

சிங்கப்பூரர்களைக் குறிவைத்து நிகழ்த்தப்படும் கம்போடிய மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக மற்றொரு சிங்கப்பூரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சிஸ் டான் துவான் ஹெங், 32, எனப்படும் அவர் சிங்கப்பூர்க் காவல்துறை தேடிவரும் 36 பேரில் ஒருவர்.

கம்போடியாவின் நோம் பென் நகரை மையமாகக் கொண்டு, எல்லை தாண்டிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அவர்கள் என்று கூறப்படுகிறது.

அந்தக் குற்றச் செயல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள ஆறாவது நபர் டான்.

அந்தக் கும்பல் அரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து இங்கு மோசடியில் ஈடுபட்டதாகவும் ஏறத்தாழ $53 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய 535 மோசடிப் புகார்களுடன் தொடர்புடையதாகவும் நம்பப்படுகிறது.

கடந்த மார்ச் 10ஆம் தேதி மலேசியாவின் பெர்லிஸ் மாநிலத்தில் கைது செய்யப்பட்ட டான், ஜூன் 5ஆம் தேதி சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது சனிக்கிழமை (ஜூன் 6) குற்றக் கும்பலின் சட்டவிரோத நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் கடுமையான குற்றம் நிகழ உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படும் என்று தெரிகிறது.

கும்பலைச் சேர்ந்த 34 பேரில் 27 பேர் சிங்கப்பூரர்கள், ஏழு பேர் மலேசியர்கள். தீவிர விசாரணைக்குப் பின்னர் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அவர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்தது.

ஆறு பேர் பிடிபட்ட நிலையில் 24 சிங்கப்பூரர்களும் ஆறு மலேசியர்களும் இன்னும் தலைமறைவாக இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2025) செப்டம்பர் 9ஆம் தேதி, சிங்கப்பூர்க் காவல்துறையும் கம்போடிய அதிகாரிகளும் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையின்போது மோசடிக் கும்பலின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்