3ல் தொடங்கும் தொலைபேசி எண்களைக் கொண்டு மோசடி; $274,000 பறிப்பு

3ல் தொடங்கும் தொலைபேசி எண்களைக் கொண்டு மோசடி; $274,000 பறிப்பு

1 mins read
6bf2f91f-5bb1-45ea-90e8-0e07ca45fc8e
மே மாத நடுப்பகுதியிலிருந்து அத்தகைய 12 அழைப்புகள் இடம்பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

3 என்ற இலக்கத்தில் தொடங்கும் தொலைபேசி எண்களிலிருந்து அழைத்து மோசடி நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாத நடுப்பகுதியிலிருந்து அத்தகைய தொலைபேசி எண்களிலிருந்து குறைந்தது 12 அழைப்புகள் சென்றிருப்பதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19) வெளியிட்ட அறிக்கை மூலம் தெரிவித்தது. அவற்றின் மூலம் கிட்டத்தட்ட 274,000 வெள்ளி பறிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிலையங்கள் அல்லது தொலைத்தொடர்பு நிறுவன ஊழியர்களைப்போல் நடித்து ஏமாற்றுக்காரர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகை மோசடியில் 3ல் தொடங்கும் எட்டு எண்களைக் கொண்ட தொலைபேசி எண்ணிலிருந்து மக்களுக்கு அழைப்பு வரும். வங்கிக் கடன் அட்டைகள், காப்புறுதித் திட்டங்கள் போன்றவை தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறி பாதிக்கப்பட்டோர் ஏமாற்றப்படுகின்றனர்.

பிறகு அதே தொலைபேசி அழைப்பு அரசாங்க அதிகாரிகளைப்போல் நடிப்போரிடம் மாற்றிவிடப்படும். அந்த ‘அரசாங்க அதிகாரி’, பாதிக்கப்பட்டவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டுவார். ‘பாதுகாப்பாகக் கணக்கிற்குப்’ பணத்தை மாற்றுமாறு பாதிக்கப்பட்டவர் கேட்டுக்கொள்ளப்படுவார். சில வேளைகளில் பணத்தை வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துத் தருமாறோ தங்களிடம் இருக்கும் விலை மதிப்புமிக்கப் பொருள்களைத் தெரியப்படுத்துமாறோ பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘உத்தரவிடப்படும்’.

இதுபோன்ற மோசடிச் செயல்களின் தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு காவல்துறை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்ஏமாற்றுகாவல்துறைபணம் பறிப்பு