பெண் ஒருவரை ஏமாற்றி அவரிடமிருந்து மோசடிக்காரர்கள் $1.2 மில்லியன் பறித்தனர்.
மோசடித் தடுப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகளைப் போல வேடமிட்டு அந்த மோசடிக்காரர்கள் அப்பெண்ணைக் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஏமாற்றினர் என்று தெரிவிக்கப்பட்டது.
தமது பெயரை வெளியிட விரும்பாத அப்பெண் மார்ச் 14ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசினார்.
இதற்குக் காவல்துறை ஏற்பாடு செய்தது.
2024ஆம் ஆண்டு டிசம்பர் 11ல் தமக்குத் தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக 50 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட அப்பெண் கூறினார்.
அழைத்தவர் தம்மை மோசடித் தடுப்பு நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி என்றும் தமது பெயர் ஜெனி என்றும் அடையாளப்படுத்திக்கொண்டதாக நிதித்துறையில் பணிபுரியும் அப்பெண் தெரிவித்தார்.
அதன்பிறகு, தம்முடன் ஆடவர் ஒருவர் பேசியதாகவும் அவர் தம்மை காவல்துறை அதிகாரியாக அடையாளப்படுத்திக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
ஒருமுறை மட்டும் பார்க்கக்கூடிய காவல்துறை அட்டையை அவர் அனுப்பிவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“அவர் அனுப்பிவைத்த அட்டையை நான் ‘கிளிக்’ செய்ததும் அது மறைந்துவிட்டது. எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவர் உண்மையான காவல்துறை அதிகாரி இல்லை என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவரிடம் கேள்வி எழுப்பினேன். இதையடுத்து, அவர் கோபமடைந்தார்,” என்று பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
தமது அடையாள அட்டையைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு ஒன்று திறக்கப்பட்டதாகவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கி அதில் போடப்பட்டதாகவும் அந்த ஆடவர் தம்மிடம் கூறியதாக அப்பெண் பகிர்ந்துகொண்டார்.
சட்டவிரோதமான வகையில் பெறப்பட்ட அப்பணத்திலிருந்து 10 விழுக்காட்டுத் தொகையைத் தாம் பெற்றுக்கொண்டதாக அந்த ஆடவர் தம்மீது குற்றம் சுமத்தியதாக அப்பெண் கூறினார்.
தமது வங்கிக் கணக்கு விவரங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறும் தமது இருப்பிடத்தை வாட்ஸ்அப் மூலம் நாளுக்கு நான்கு முறை தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த ஆடவர் கூறியதாகவும் அப்பெண் தெரிவித்தார்.
இந்த விவகாரம் ரகசியமானது என்றும் அதுகுறித்து யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்றும் ஆடவர் எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரியிடம்தான் பேசுகிறோம் என நம்பி அவர் கூறிய அனைத்தையும் அப்பெண் செய்தார்.
இதையடுத்து, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக 2024ஆம் தேதி டிசம்பர் 13ல் அப்பெண்ணுக்கு கடிதம் ஒன்றை மோசடிக்காரர்கள் அனுப்பிவைத்தனர்.
சீன வங்கி ஒன்றில் புதிய வங்கிக் கணக்கைத் திறந்து அதில் $500,000 போட காவல்துறை அதிகாரியாகத் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர் உத்தரவிட்டார்.
அப்பணத்தைத் தூண்டிலாகப் பயன்படுத்தி மற்ற சந்தேக நபர்களைச் சுற்றி வளைக்கப்போவதாக அவர் தெரிவித்ததாக அப்பெண் கூறினார்.
“அக்காலகட்டத்தில் எனது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு மிக அதிகமாக இருந்தது. என்னால் சரியாக யோசிக்க முடியவில்லை. அவர்கள் கேட்டதைக் கொடுத்து பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே முக்கியம் என்று நினைத்தேன்,” என்றார் அப்பெண்.
அக்காலகட்டத்தில் தமது தந்தையின் மரணமும் தம்மைச் சோகத்தில் ஆழ்த்தியிருந்ததாக அவர் கூறினார்.
இதுபோல அவர் பலமுறை பணம் அனுப்பிவைத்தார்,
ஒருமுறை ஆடவர் ஒருவரைச் சந்தித்து அவரிடம் பணத்தை ஒப்படைத்தார்.
இதுபோல மொத்தம் $1.2 மில்லியன் தொகையை அப்பெண் மோசடிக்காரர்களிடம் தந்து ஏமாந்தார்.
புதிய வீடு வாங்கவும் பணி ஓய்வுப்பெற்ற பிறகு பயன்படுத்தவும் அந்தத் தொகையை அவர் ஒதுக்கி வைத்திருந்தார்.
மோசடிக்காரர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராமல் போகவே, அழைத்தவர்கள் மோசடிக்காரர்கள் எனத் தமக்குத் தெரியவந்ததாக அப்பெண் கூறினார்.
இவ்வாண்டு பிப்ரவரி 6ஆம் தேதியன்று பாசிர் ரிஸ் அக்கம்பக்க போலிஸ் நிலையத்துக்குச் சென்று அவர் புகார் அளித்தார்.