இணையம் வாயிலாக முகவரி மாற்றம் குறித்த அம்சத்தின் சில பகுதிகளைக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
அதன் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் வரை அது தொடர்ந்து பயன்பாட்டில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது.
பிறரது சிங்பாஸ் கணக்குகள் தொடர்பான தனிப்பட்ட விவரங்களைப் பயன்படுத்தி ஆணையத்தின் இணையம் மூலம் முகவரி மாற்றும் தளத்தின் பாதுகாப்பு அம்சங்களை மோசடிக்காரர்கள் முறியடித்ததாக ஜனவரி 11ஆம் தேதியன்று ஆணையம் கூறியது.
இதுகுறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 4) நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் விளக்கம் அளித்தார்.
சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் போன்ற அரசாங்க சலுகைகளின் விநியோகம் மோசடிக்காரர்களால் பாதிக்கப்பட்டனவா என்பதைக் கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.
அப்படி யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு உதவி வழங்கப்படும்.
2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அனுமதியின்றி தங்களது முகவரி இணையம் வாயிலாக மாற்றப்பட்டதாக பலர் புகார் அளித்திருந்ததாக ஜனவரி 11ஆம் தேதியன்று ஆணையம் தெரிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
முகவரியை மாற்ற பொதுமக்களுக்குச் சௌகரியமாக இருக்க 2020ஆம் ஆண்டில் ஆணையம் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, சிங்பாஸ் கணக்கைப் பயன்படுத்தி ஆணையத்தின் இணையத்தளம் வாயிலாக முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.
முகவரியை மாற்ற காவல்நிலையத்துக்குச் செல்லத் தேவையில்லை.
இணையம் மூலம் முகவரியை மாற்றத் தெரியாதவர்கள், சிங்பாஸ் கணக்கு வைத்திருக்கும் உறவினர்கள் அல்லது நண்பர்களின் உதவியை நாடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நண்பர்கள் அல்லது உறவினர்கள் அவர்கள் சார்பாக முகவரியை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், 99 பேரின் முகவரியை இணையம் மூலம் மாற்ற மோசடிக்காரர்கள் முயன்றதாகவும் திருவாட்டி சுன் தெரிவித்தார்.
அவர்களில் 71 பேரின் முகவரிகளை அவர்கள் மாற்றியதாக அவர் கூறினார்.
இந்த 71 பேரில், 16 பேரின் சிங்பாஸ் கணக்கு மறைச்சொல்லை மோசடிக்காரர்கள் மாற்றி, அக்கணக்குகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக திருவாட்டி சுன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட 99 பேரின் சிங்பாஸ் கணக்குகள் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அவர்களது சிங்பாஸ் கணக்குகளைச் சரிசெய்து பாதுகாப்பானதாக்க அதிகாரிகள் உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
அவர்களது அடையாள அட்டை மாற்றப்படும் என்றும் அடையாள அட்டை வழங்கப்படும் தேதி அதில் மாறியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மோசடிக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த 16 சிங்பாஸ் கணக்குகளிலிருந்து மேற்கொள்ளப்பட்டிருக்கும் மோசடி நடவடிக்கைகள் சரிசெய்யப்படும் என்றும் இனிமேல் அவ்வாறு நிகழாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருவாட்டி சுன் கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.