தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, நிதி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளில் உதவி கேட்டு நிதித் தொழில்துறைக்கான சர்ச்சைகள் தீர்வு நிலையத்தை நாடியோரில் ஆக அதிகமானோர் மோசடி, ஏமாற்றுச் செயல்களால் பாதிக்கப்பட்டோராக இருந்தனர்.
அவர்கள் சராசரியாக 24,531 வெள்ளி இழப்பீடு கோரியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதித் தொழில்துறைக்கான சர்ச்சைகள் தீர்வு நிலையத்திடம், கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி நிறைவடைந்த 2025 / 26 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமாக, 103 நிதி அமைப்புகளுக்கு எதிராக 5,344 புகார்கள் அளிக்கப்பட்டன. முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள் உள்ளிட்டவை அந்நிறுவனங்களில் அடங்கும்.
புகார்களின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டு பதிவானதைவிட 23 விழுக்காடு அதிகம் என்று நிதித் தொழில்துறைக்கான சர்ச்சைகள் தீர்வு நிலையம் வியாழக்கிழமை (நவம்பர் 26) அதன் அறிக்கையில் குறிப்பிட்டது. அந்த அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவருகிறது.
