புதிய பொலிவுடன் திறந்த ‘ஸ்கேப்’

2 mins read
32765cbc-7a52-484e-bfbd-7204dc1f1d1a
கலாசார, சமூக, இளையர் துறைக்கான தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ ‘எக்ஸ் ஸ்கேப்’ விழாவில் கலந்துகொண்டார். - படம்: மியூஸ் அண்ட் மோடிஃப்

சோமர்செட் வட்டாரத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ் ஸ்கேப் (X *SCAPE) விழா கடந்த வார இறுதியில் களைகட்டியது.

நவம்பர் 8, 9ஆம் தேதிகளில் இளையர்களால் இளையர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

எக்ஸ் ஸ்கேப் விழாவின்போது புதிய வடிவில் ஸ்கேப் (*SCAPE) தளம் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிய கூடங்கள், கூட்டங்களை நடத்துவதற்கான அறைகள், மறுவடிவமைக்கப்பட்ட அரங்கம் ஆகிய அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்ட ஸ்கேப் தளம் திறக்கப்பட்டது.

ஸ்கேப் தளத்தை ஏற்கெனவே 80 விழுக்காட்டுக் குத்தகையாளர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

எஞ்சிய 20 விழுக்காட்டினர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் புதிய வசதிகளைப் பயன்படுத்துவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கேப் முழுக்க முழுக்க இளையர்களை ஒன்றிணைத்து அவர்களின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் பொறுப்பை முன்னெடுப்பதில் உறுதியுடன் இருக்கிறது.

ஸ்கேப் வளாகத்துக்கு அப்பாற்பட்டு தனது திட்டங்களை விரிவுபடுத்த ஆர்ச்சர்ட் சினிலெ‌‌ஷர், 111 சோமர்செட், டிரைஃபெக்டா ஆகியவற்றுடன் ஸ்கேப் நிறுவனம் கைகோக்கத் திட்டமிடுகிறது.

கடந்த சில ஆண்டுகளில் இளையர்களை உற்சாகப்படுத்தி தலைவர்களாக அவர்களை உருவாக்குவதற்கான பல வழிகளை முன்னெடுத்தது.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை மொத்தம் 190 நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஸ்கேப் நடத்தியுள்ளது.

அவற்றுள் 80 நிகழ்ச்சிகள் இளையர்கள் நடத்தியது.

கூடுதலாக ஸ்கேப் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் 10,000க்கும் அதிகமான இளையர்கள் கலந்துகொண்டனர். இளையர்களின் நம்பிக்கையையும் புத்தாக்கத்தையும் வளர்க்க ஆடல், இசை, திரை, விளையாட்டு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தற்போது மறுவடிவமைக்கப்பட்ட ஸ்கேப் தளம் ஒவ்வோர் ஆண்டும் அதன் நிகழ்ச்சிகள் மூலம் 40,000 இளையர்களைச் சென்றடைய இலக்குக் கொண்டுள்ளது.

புதுப்பொலிவு பெற்றுள்ள ஸ்கேப் தளத்தை இளையர்கள் தங்கள் ஒத்திகைகளுக்காக எளிதில் முன்பதிவுசெய்ய முடியும்.

இவ்வாண்டு தொடக்கத்தில் ஸ்கேப் தளம் ‘அக்செஸ் சிங்கப்பூர்’ (Access Singapore) அமைப்புடன் இணைந்து மாணவர்கள் 24 மணி நேரத்துக்கும் கற்பதற்கான தளத்தை அமைத்தது.

குறிப்புச் சொற்கள்