மின்னிலக்க முறையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள உணவுக் கடைகளுக்கு உதவிக்கரம் நீட்டி வரும் திட்டம் அடுத்த ஆண்டு இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அரசாங்கம் ஏற்கெனவே உதவி செய்ததன் காரணமாக இதுவரை 11,500க்கும் மேற்பட்ட உணவுக்கடைகள் ரொக்கப் பணமில்லா வர்த்தக முறைக்கு மாறியுள்ளன.
மேலும், பல நிறுவனங்கள் மின்னிலக்கத்திற்கு மாறுவதை ஊக்குவிக்க, ‘ஹாக்கர்ஸ் கோ டிஜிட்டல்’ (HGD) உதவித் திட்டம் நீட்டிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மின்னிலக்கப் பரிவர்த்தனைகளுக்கும், 0.5 விழுக்காடு பரிவர்த்தனைக் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது அந்தத் திட்டம்.
ஒவ்வொரு மாதமும் உணவுக்கடையின் முதல் $20,000 மதிப்பிலான வர்த்தகத்திற்கு அந்த உதவி கிடைக்கும்.
மேலும், அந்த வர்த்தகம் முழுவதும் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு இருக்கவேண்டும்.
உதவித் திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் இணைந்து அறிமுகம் செய்தன.
தேசிய சுற்றுப்புற வாரியம், வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் போன்ற அரசாங்க அமைப்புகள் நடத்தும் உணவங்காடி நிலையங்களில் உள்ள ஏறத்தாழ 18,000 கடைகளை மின்னிலக்கத்திற்கு மாறச் செய்வதும் திட்டத்தின் நோக்கம்.
தொடர்புடைய செய்திகள்
ஓராண்டுக்கு முன், 2023 அக்டோபர் மாத நிலவரப்படி 11,000 உணவுக் கடைகள் மின்னிலக்கத்திற்கு மாறிவிட்டதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டு இருந்தது.
திட்டம் 2018 முதல், மூன்று ஆண்டு காலத்திற்கு நீட்டிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவுபெறுவதாக இருந்தது.
இருப்பினும், இவ்வாண்டு இறுதிவரை ஓராண்டு காலத்திற்கு அதனை நீட்டிப்பதாக 2023 அக்டோபரில் அறிவிக்கப்பட்டது.
தற்போது மீண்டும் ஒருமுறை, 2025 இறுதிவரை உதவித் திட்டம் நீட்டிக்கப்படுவதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் வியாழக்கிழமை (அக்டோபர் 10) கூட்டாக அறிவித்தன.