குறைந்த எடை கொண்ட வர்த்தக வாகனங்களில் தூய்மையான எரிசக்திப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ‘சிவிஇஎஸ்’ (The Commercial Vehicle Emissions Scheme (CVES) ) திட்டம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு, 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தத் திட்டம் 2025ஆம் ஆண்டு மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
இதில் ஏ பிரிவின்கீழ் வரும் வாகனங்களுக்கு வழங்கப்படும் ஊக்குவிப்புத் தொகையான $15,000 தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் பி பிரிவின்கீழ் வரும் பெரும்பாலும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வழங்கப்படும் $5,000 ஊக்குவிப்புத் தொகை நீக்கப்படும்.
சி பிரிவின்கீழ் வரும், பெரும்பாலும் டீசல் எண்ணெய்யில் இயங்கும் வர்த்தக வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் $15,000லிருந்து $20,000ஆக உயர்த்தப்படும் என்று தேசிய சுற்றுப்புற வாரியமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் திங்கள்கிழமை (டிசம்பர் 30ஆம் தேதி) தெரிவித்தன.
இதுபற்றி அறிக்கை ஒன்றில் தேசிய சுற்றுப்புற வாரியமும் நிலப் போக்குவரத்து ஆணையமும் டீசல் எண்ணெய்யில் இயங்கும் கனரக வர்த்தக வாகனங்களை தூய்மையான வாகனங்களாக மாற்றும் திட்டமும் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தேதிக்குப் பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சிவிஇஎஸ் திட்டம் 2021ஆம் ஆண்டு அறிமுகம் கண்டது. இது 3,500 கிலோகிராம் எடைக்குள் இருக்கும் வர்த்தக வாகனங்கள், சிற்றுந்துகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். இதில் வாகனங்கள் ஏற்படுத்தும் மாசைப் பொறுத்து அவை பிரிக்கப்படும். இதில் குறிப்பிட்ட வாகனம் ஒன்று அது எந்தப் பிரிவில் உள்ளது என்பதைப் பொறுத்து அதற்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும் அல்லது தண்டத் தொகை விதிக்கப்படும்.
தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் 2040ஆம் ஆண்டுக்குள் அனைத்து வாகனங்களும் தூய்மையான எரிசக்தியை பயன்படுத்தும் நிலையை எட்ட வேண்டும் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்துப் போவதாக உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.