தாயகம் திரும்பும் சிங்கப்பூர் மாணவர்கள் வரும் ஜூலை 8ஆம் தேதி முதல் உள்ளூர் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரிகள், மிலேனியா கல்விக் கழகம் ஆகியவற்றில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2027ஆம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கை, ‘சிங்கப்பூருக்குத் திரும்பும் மாணவர்களுக்கான பள்ளிச் சேர்க்கை நடவடிக்கை’ எனப்படும் மையப்படுத்தப்பட்ட தகுதிச் சோதனைகளின் முடிவுகளின் அடிப்படையில் நடைபெறும்.
உயர்நிலை 1 முதல் 3ஆம் வகுப்புகளில் சேர விரும்புவோர் ஜூலை 8ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கான ஆங்கிலம், கணிதத் தகுதிச் சோதனைகள் செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நடைபெறும்.
தொடக்கக் கல்லூரிகள், மிலேனியா கல்விக் கழகத்துக்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 9ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 16ஆம் தேதி வரை திறந்திருக்கும்.
அதற்கான தேர்வுகள் நவம்பர் மாதம் 6ஆம் தேதி நடத்தப்படும். இவற்றுக்கான முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டு, மாணவர்கள் 2027ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் பள்ளிகளில் இணைவர்.
தேசியப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் முக்கிய ஆண்டுகள் என்பதால், உயர்நிலை 4, புகுமுக வகுப்பு 2 ஆகிய வகுப்புகளில் பொதுவாக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்.
செப்டம்பர் மாதத் தகுதிச் சோதனைகளில் கலந்துகொள்ள முடியாத உயர்நிலை மாணவர்கள், மாற்று ஏற்பாடாக டிசம்பர் மாதம் 2ஆம் தேதி நடைபெறும் கூடுதல் சேர்க்கை நடவடிக்கை தேர்வை எழுதலாம். அதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் மாதம் 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
வீட்டுக்கு அருகிலுள்ள பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ‘உறுதி அளிக்கப்பட்ட பள்ளிச் சேர்க்கை வசதி’ மூலமும் விண்ணப்பிக்கலாம்.
இதில் மையப்படுத்தப்பட்ட தேர்வுகளுக்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட பள்ளியே நடத்தும் பள்ளிசார்ந்த மதிப்பீடுகள், நேர்காணல் மூலம் மாணவருக்குப் பொருத்தமான நிலை, வகுப்பு தீர்மானிக்கப்படும்.
2027ஆம் கல்வி ஆண்டுக்கான பள்ளிச் சேர்க்கை குறித்த கூடுதல் விவரங்களை www.moe.gov.sg/returning-singaporeans என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.

