தலைமுறை தலைமுறையாக, பள்ளி உணவகங்கள் என்பது மாணவர்கள் அடுத்த பாடவேளைக்கு அவசரமாகச் செல்வதற்கு முன், விரைவாக உணவு சாப்பிடும் இடங்களாகவே இருந்து வருகின்றன.
சிங்கப்பூர்ப் பள்ளிகளில் பொதுவான காட்சியாக இருக்கும் நீண்ட, பல வண்ணங்கள் கொண்ட நீள்சதுர மேசைகள், வசதியை விடச் செயல்பாட்டுத் திறனுக்காகவே நீண்டகாலமாக வடிவமைக்கப்பட்டு வந்தன.
ஆனால், தற்போது அந்த நிலை மாறி வருகிறது.
ஈசூன் உயர்நிலைப்பள்ளி, செங்ஹுவா உயர்நிலைப்பள்ளி, தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக்கல்லூரி உள்ளிட்ட பல பள்ளிகளில், உணவகங்கள் சாப்பிட்டுவிட்டுச் செல்லும் இடங்களாக மட்டும் இப்போது இல்லை.
நவீன உணவகங்கள் மற்றும் நண்பர்கள் கூடும் இடங்களைப் போல இவை மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் அங்கேயே அமர்ந்து உரையாடவும் ஓய்வெடுக்கவும் தூண்டப்படுகிறார்கள்.
கடந்த ஓராண்டில், உணவு நேரங்களைத் தாண்டிப் பல்நோக்கு இடங்களாகத் தங்கள் உணவகங்களை மாற்றியமைத்த பல பள்ளிகளில் இந்த மூன்று பள்ளிகளும் அடங்கும்.
2025ஆம் ஆண்டில், மோன்ஃபர்ட் உயர்நிலைப்பள்ளி, சொங்ஹுவா தொடக்கப்பள்ளி, சிஎச்ஐஜே செயின்ட் ஜோசஃப் கான்வென்ட் உள்ளிட்ட குறைந்தது 12 பள்ளிகள், பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் உணவகங்களைப் புதுப்பிக்க அரசுக் கொள்முதல் தளமான ‘ஜிபிஸ்’ஸில் (GeBIZ) ஏலக்குத்தகைகளை வெளியிட்டிருந்தன.
உணவுக் கழிவுகளை உரமாக்குதல் மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான இடங்கள், மாணவர்கள் தொடுதிரை மூலம் கற்கும் இடங்கள் ஆகியவை அதில் அடங்கும். மேலும், மாணவர்கள் ஆராய்ந்து கேள்விகள் கேட்டுத் தெரிந்துகொள்ளும் விசாரணை அடிப்படையிலான கற்றலை ஊக்குவிக்கும் வசதிகளும் இதில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள செங்ஹுவா உயர்நிலைப்பள்ளியில், உணவகத் தூண்களைச் சுற்றி நின்றபடி பயன்படுத்தப்படும் மேசைகளும் உயரமான நாற்காலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் கற்றல் சாதனங்களுக்கு மின்னூட்ட யுஎஸ்பி மின்னூட்டு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நீண்ட இருக்கைகளுக்குப் பதிலாக, முதுகுத் தண்டுக்கு ஆதரவு தரும் வசதியான நாற்காலிகளும் வட்ட மேசைகள் கொண்ட நவீன இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் விளையாட சதுரங்கம் போன்ற பலகை விளையாட்டுகளும் அங்கு உள்ளன.
2025ஆம் ஆண்டின் இரண்டாம் பருவத்தில், இடைவேளை நேரங்களில் மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என்ற கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த உணவகம் புதுப்பிக்கப்பட்டதாகப் பள்ளி முதல்வர் இங் ஹோக் சூன் தெரிவித்தார்.
இவ்வாண்டு (2026) ஜனவரி மாதத்தில் நாடு தழுவிய அளவில் கைப்பேசி பயன்பாட்டுக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்பே பள்ளி இம்மாற்றத்தைச் செய்துள்ளது.
ஈசூன் உயர்நிலைப்பள்ளியிலும் மார்ச் மாதம் புதுப்பிப்புப் பணிகள் முடிந்த பிறகு, மாணவர்கள் புதிய உணவக இடத்தில் ஓய்வெடுக்கவும் வேலை செய்யவும் கூடுகிறார்கள்.
மாணவர்கள் பள்ளி முடிந்த பிறகு எந்த மாதிரியான இடங்களுக்குச் செல்ல விரும்புகிறார்கள் என்பதை தழுவி இந்த வடிவமைப்பு செய்யப்பட்டதாகப் பள்ளியின் துணை முதல்வர் தே ஹியாங் சூன் கூறினார்.
“நாங்களும் கஃபே போன்ற இடங்களுக்குச் சென்று இளைஞர்களைப் போல உரையாடவும் வேலை செய்யவும் விரும்புகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டம் 2025 ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி இரண்டு கட்டங்களாக முடிக்கப்பட்டது. முதல் கட்டமாக, பயன்படுத்தப்படாத ஓர் இடம் ‘த ஸ்டேர்வே’ என்ற அடுக்கு இருக்கைத் தளமாக மாற்றப்பட்டது.
தெம்பனிஸ் மெரிடியன் தொடக்கக் கல்லூரியில், உணவக மாற்றத்தை மாணவர்களே முன்னின்று நடத்தினர்.
இந்த முயற்சி 2022இல் தொடங்கியது. உணவகத்துக்கு வெளியே காலியாக இருந்த இடம் ‘கோஃப்’ என்ற ஓய்வெடுக்கும் இடமாக மாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2025ல் உணவகம் பேரளவில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.
பள்ளியை விட்டுச் செல்லும் மாணவர்கள் வளாகத்தில் தங்களின் நிரந்தர அடையாளத்தை விட்டுச் செல்லும் ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகத் திட்டம் அமைந்ததாக அதனை மேற்பார்வையிட்ட கணித ஆசிரியை திருவாட்டி நிக்கலெட் சியா கூறினார். “மாணவர்களின் குரலுக்கும் செயல்பாட்டுக்கும் அதிகாரம் அளிக்க நாங்கள் விரும்புகிறோம். இது அவர்கள் பெருமைப்படும் ஒன்றாக இருக்கும்,” என்றார் அவர்.

