பள்ளி நேரடிச் சேர்க்கைக்கான (டிஎஸ்ஏ) தெரிவின்போது கல்வி அமைச்சு வரையறுத்துள்ள வழிகாட்டிக் குறிப்புகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்யும்படிப் பள்ளிகளுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
தெரிவுகள் தொடர்பில் இறுதி முடிவுகளை எடுக்கும் பணியில் பள்ளியின் தலைமைத்துவக் குழுவும் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதும் வழிகாட்டிக் குறிப்புகளில் அடங்கும்.
பயிற்றுவிப்பாளர்கள் இந்தத் தெரிவுமுறையில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த இயலும் என்று கூறுவதாகத் தெரியவந்தால், கல்வி அமைச்சின் பதிவேட்டிலிருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்பதைப் பள்ளிகள் அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது கட்டாயம்.
செங்காங் குழுத்தொகுதியின் பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவா எழுப்பிய கேள்விக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி எழுத்து மூலம் அளித்த பதிலில் அமைச்சர் சான் இவ்வாறு குறிப்பிட்டார்.
பள்ளி நேரடிச் சேர்க்கை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள மாணவருடன் நெருங்கிய தொடர்பு உள்ள தனிநபர்கள் கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையிலான முரண்பாடு குறித்துத் தெரியப்படுத்த வேண்டுமா அல்லது ‘டிஎஸ்ஏ’ தெரிவுப் பணியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டுமா என்று திரு சுவா கேட்டிருந்தார்.
கடமைக்கும் சொந்த நலனுக்கும் இடையிலான முரண்பாடு விளையக்கூடிய சூழல் குறித்து அனைத்துத் தனிநபர்களும் தெரியப்படுத்துவது கட்டாயம் என்றார் அமைச்சர் சான்.
அத்தகைய சூழல் கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தெரிவுப் பணியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
ஜூலை மாத இறுதியில், கூடைப்பந்துப் பயிற்றுவிப்பாளர் ஒருவர் பணம் பெற்றுக்கொண்டு, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி புகழ்பெற்ற உயர்நிலைப் பள்ளிகளில் நேரடிச் சேர்க்கைக்கு உதவுவதாகத் தெரியவந்தது. இதற்கு அவர் ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் ஏறக்குறைய $45,000 பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து அவர் அமைச்சின் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தற்போது அவர் கல்வி அமைச்சின்கீழ் இயங்கும் எந்தப் பள்ளியிலும் பணியாற்றவில்லை. அத்துடன், பயிற்றுவிப்பாளர்களுக்கான தேசியப் பதிவேட்டிலிருந்தும் அவரது பெயர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சான் கூறினார்.