இளையர்கள் சமூக நன்மைக்குத் தங்களால் பங்களிக்க முடியும் என நம்பும்போது, அவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கிப் பணியாற்ற முன்வருவர் என்று அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.
இளையர்களிடம் பள்ளிகள் உருவாக்க வேண்டிய முக்கியப் பண்பு இது என்றார் அவர். தான்சானியாவின் டார் எஸ் சலாம் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அவர் உரையாற்றினார். மாணவர்கள் ஏறத்தாழ 600 பேருடன் பேராசிரியர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
கல்வி, திறன்கள் ஆகியவை மட்டுமன்றி தங்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் இளையர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்றார் திரு தர்மன். இளையர்களிடையே வெளிநாட்டில் வேலைபார்க்கும் ஆர்வம் அதிகரித்து வருவதைச் சுட்டிய மாணவர் ஒருவர், தான்சானியா போன்ற வளரும் நாடு அதன் இளையர்களிடையே தாயகம் மீதான நம்பிக்கையை வளர்ப்பது எப்படி என்று எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
உலக வங்கியின் கணிப்புப்படி, அடுத்த 10 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் 500 மில்லியன் இளையர்கள் வேலைச்சந்தையில் நுழைவர்; ஆனால் 165 மில்லியன் பேருக்கு மட்டுமே முறையான வேலைகள் கிடைக்கும்.
335 மில்லியன் எனும் இந்த இடைவெளி வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது என்பதை அதிபர் தர்மன் சுட்டினார்.
“இந்த இடைவெளி நம்பிக்கையின்மையையும் ஏமாற்றத்தையும் உருவாக்கலாம். எனவே, நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே பொருளியல் வளர்ச்சியின் வெற்றிக்கான அளவுகோலாகும்,” என்று அவர் விளக்கினார்.
மேலும், கல்விமுறையை வெறும் பட்டப்படிப்புடன் சுருக்கிக் கொள்ளாமல், திறன் மேம்பாட்டை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
திறன் மேம்பாடு தொடர்பான கேள்விக்கு அளித்த பதிலில், சிங்கப்பூர் தனது ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் பல்கலைக்கழகங்களைவிட பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரிகளையும் தொழில்நுட்பக் கல்விக்கழகங்களையும் அமைப்பதற்கே முன்னுரிமை அளித்தது என்பதை அதிபர் தர்மன் எடுத்துரைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
நான்கு பிள்ளைகளுக்குத் தந்தையான திரு தர்மன் தலைமைத்துவப் பொறுப்புகளுக்கு இடையில் பிள்ளைகள் தொடர்பான பல்வேறு பொறுப்புகளை எவ்வாறு கையாள்கிறார் என்று மாணவர் ஒருவர் கேட்டார். அதற்குப் பதிலளித்த திரு தர்மன், பிள்ளைகளை வளர்ப்பது சுமையன்று, அது தம்பதியரின் கூட்டுப் பொறுப்பு மற்றும் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார்.

