கல்வி அமைச்சில் நீண்டகாலமாகப் பணியாற்றி வந்துள்ள திருவாட்டி தாம் மன் சீ, ஜூலை 1ஆம் தேதி அறிவியல் நிலைய வாரியத்தின் தலைமை நிர்வாகியாகவுள்ளார். தற்போது வாரியத்தின் துணைத் தலைமை நிர்வாகியாக அவர் பொறுப்பு வகிக்கிறார்.
ஜூன் 30ஆம் தேதி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும் டாக்டர் லிம் டிட் மெங்கிற்கு பிறகு திருவாட்டி தாம், 55, அப்பொறுப்பை ஏற்கவுள்ளதாக சிங்கப்பூர் அறிவியல் நிலையம் திங்கட்கிழமை (ஜூன் 2) வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
டாக்டர் லிம், 2010லிருந்து அறிவியல் நிலைய வாரியத்துக்குத் தலைமை தாங்கி வந்துள்ளார். அவரது தலைமைத்துவத்தின்கீழ் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் கற்றல் எல்லா வயதினரும் அணுகக்கூடியதாக இருந்தது என்று அந்த அறிக்கை கூறியது.
டாக்டர் லிம்மின் பதவிக்காலத்தில் அறிவியலில் ஆய்வு, செயல்முறைக் கற்றல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை சிங்கப்பூர் அறிவியல் நிலையம் மேற்கொண்டது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் துறை இணைப் பேராசிரியரான டாக்டர் லிம், 65, அறிவியல் நிலைய வாரியத்தின் தலைமை நிர்வாகியாக புரிந்த சாதனைகள் ஒருபுறமிருக்க, பல்வேறு அறிவியல் அமைப்புகளில் தலைமைப் பொறுப்புகளையும் வகித்தார்.
அவருக்குப் பிறகு அறிவியல் நிலைய வாரியத்தில் தலைமைப் பொறுப்பேற்கும் திருவாட்டி தாம், கல்வி அமைச்சில் பல்வேறு தலைமைத்துவப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
சிங்கப்பூர் ஆசிரியர் பயிற்சிக் கழக நிர்வாக இயக்குநர், ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி, ஆண்டர்சன் உயர்நிலைப்பள்ளி இவ்விரண்டின் பள்ளி முதல்வர் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.

