ஈராக், செங்கடல் வான்வழியைத் தவிர்க்கும் ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

1 mins read
65338f26-b462-4f82-98ee-6d06abc0dd61
பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பே மிக முக்கியமானது என எஸ்ஐஏ குழுமத்தின் பேச்சாளர் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. அதனால், ஈராக், செங்கடல் வான்வழியைத் தவிர்ப்பதாக ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளன.

அந்த இரண்டு வான்வழிகளைத் தவிர்ப்பதால் ஸ்கூட், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களுக்குச் செயல்பாடு ரீதியாக பெரிய தாக்கம் இருக்காது என்று எஸ்ஐஏ குழுமத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் சனிக்கிழமை (ஜனவரி 24) கூறினார்.

பயணிகள், ஊழியர்களின் பாதுகாப்பே மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

“நிலைமையை எஸ்ஐஏ குழுமம் அணுக்கமாகக் கவனித்து வருகிறது. மத்தியக் கிழக்கின் சூழலைப் பொறுத்து விமானங்களின் பாதைகளில் மாற்றம் இடம்பெறும்,” என்று பேச்சாளர் கூறினார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றத்தால் மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகள் சிலவற்றுக்கு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பாரசீக வளைகுடா பகுதிகளிலும் தற்போது விமானப் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

ஜனவரி 23ஆம் தேதி, ஏர் பிரான்ஸ், கேஎல்எம் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் துபாய், ரியாத், டாமம், டெல் அவிவ் ஆகிய பகுதிகளுக்குச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

பின்னர் ஏர் பிரான்ஸ், ஜனவரி 24ஆம் தேதி துபாய்க்கு அதன் விமானச் சேவையை வழக்கும் போல் தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்