ஸ்கூட் விமானப் பணியாளர்களுக்கு வீரப் பதக்கம்

ஸ்கூட் விமானப் பணியாளர்களுக்கு வீரப் பதக்கம்

1 mins read
224a13d7-c362-41c9-bbb4-c38dfb443283
பதக்கம் பெறுவோரில் ஒருவரான ஸ்கூட் ஊழியர் ஜிமி பங் (நடுவில்). 2020ல் சீனாவின் வூஹான் நகரில் சிக்கியிருந்த சிங்கப்பூரர்களை மீட்க உதவிய ஸ்கூட் ஊழியர்களில் இவரும் ஒருவர். படம்: ஸ்கூட் -

சீனாவின் வூஹான் நகரில் கொவிட்-19 கிருமி தலைதூக்கியபோது 170க்கும் அதிகமான சிங்கப்பூரர்களும் அவர்களின் குடும்பத்தாரும் அந்நகரில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க உதவிய ஸ்கூட் விமான ஊழியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் கொவிட்-19 தொடர்பில் 'மெடல் ஆஃப் வேலர்' எனும் வீரப் பதக்கம் வழங்கப்படுகிறது.

முதலில் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதியன்று வூஹானில் சிக்கியிருந்த சிங்கப்பூரர்களில் 92 பேர் ஸ்கூட் விமானத்தில் இங்கு கொண்டு வரப்பட்டனர். அதற்குப் பிறகு பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதியன்று மேலும் பல சிங்கப்பூரர்கள் ஸ்கூட் விமானத்தில் வூஹானிலிருந்து மீட்கப்பட்டனர்.

விமான ஊழியர் ஜிமி பங் உட்பட அந்த இரு நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட சுமார் 30 ஸ்கூட் ஊழியர்கள் வீரப் பதக்கத்தைப் பெறுகின்றனர்.

கொவிட்-19க்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் பெரும்பங்காற்றிய சுமார் 9,500 பேருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. அவர்களில் சம்பந்தப்பட்ட ஸ்கூட் ஊழியர்களும் அடங்குவர். விருதுகள் அடுத்த ஆண்டு வழங்கப்படும்.