தொழில்நுட்பக் கோளாறால் ரத்தான ஸ்கூட் விமானப் பயணம்

தொழில்நுட்பக் கோளாறால் ரத்தான ஸ்கூட் விமானப் பயணம்

2 mins read
1d03a04b-465d-4471-82b5-086e79c0d47c
திங்கட்கிழமை (பிப்ரவரி 9) இரவு 10 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து புறப்படவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்று ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது.  - படம்: (பயணி) MEHDI BENSOUDA KORACHI

கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வரவேண்டிய ஸ்கூட் விமானம் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 9) தொழில்நுட்பக் கோளாற்றால் ரத்தானது.

அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோலாலம்பூரில் இருந்து TR497 என்ற விமானம் பயணம் புறப்படவிருந்தது. அதற்கு முன்னதாக விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த நேரத்துக்குள் அதனைச் சரிசெய்ய முடியாததால், பயணம் ரத்து செய்யப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைனஸ் நிறுவனத்தின் பட்ஜெட் (கட்டுப்படியான விலை) சேவையான ஸ்கூட் நிறுவனம் அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

விமானத்தைச் சோதித்த பொறியாளர்களுக்கு அதனைச் சீர்செய்ய அதிக நேரம் தேவைப்பட்டதால் ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று ஸ்கூட் தெரிவித்தது. பயணம் ரத்தானதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தற்காலிக தங்குமிடமும் பானங்களும் வழங்கப்பட்டன.

அன்று பயன்படுத்தப்பட்ட விமானம் போயிங் 787-8 ரகத்தைச் சேர்ந்தது என்று பயணங்களைக் கண்காணிக்கும் ‘ஃபிளைட் அவேர்’ இணையத்தளம் பதிவுசெய்தது.

வாய்ப்புக் கிடைத்ததைப் பொறுத்து, பயணிகள் மாற்று விமானங்களில் பயணத்தைத் தொடர்ந்தனர். அவ்வாறு செல்ல விரும்பாத பயணிகளுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் முழுவதுமாகத் திரும்பத் தரப்பட்டது எனவும் ஸ்கூட் நிறுவனம் தெரிவித்தது.

இரவு பத்து மணிக்குள் விமானத்தில் அமர்ந்திருந்த பயணிகளுக்கு அதிகாலை 1 மணியளவில் பயண ரத்து பற்றி அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் விமானத்தின் ‘பிரேக்’ எனப்படும் நிறுத்தும் கருவிகளில் சோதனை என்று தெரிவிக்கப்பட்டு பிறகு பயணம் ரத்து என மூன்று மணி நேரத்துக்குப் பிறகு விளக்கப்பட்டுள்ளது.

அதிகாலை இரண்டு மணியளவில் பேருந்தில் பயணிகள் மீண்டும் விமான நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். ஒரு சில பயணிகள் ஹோட்டலில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டு, பிறகு காலை 7 மணிக்கு மாற்றுப் பயணத்துக்காக விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

மாற்று விமானமான SQ107, சிங்கப்பூரில் செவ்வாய்க்கிழமை மதியம் 12.25 மணிக்கு தரையிறங்கியது. ஏறத்தாழ 200 பயணிகள் பாதிக்கப்பட்டதாக ஒரு பயணி செய்தியாளர்களிடம் கூறினார்.

ஸ்கூட் விமானச் சேவையின் பேச்சாளர் நேர்ந்த சம்பவத்துக்கு நிறுவனத்தின் சார்பாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

“பயணிகள், பணியாளர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்கு நாங்கள் தலையாய முன்னுரிமை வழங்குகிறோம். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இயன்றவரை உதவிகளைச் செய்துவருகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்