பல விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு செயல்பாட்டுக் காரணங்களைச் சுட்டிய ஸ்கூட்

1 mins read
a775ed22-d26e-4f5f-8f57-e75d6f9d4a85
மே 2ஆம் தேதிமுதல் 6ஆம் தேதிவரை, 33 ஸ்கூட் விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஐந்து நாள் காலகட்டத்தில் 30க்கும் மேற்பட்ட ஸ்கூட் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதற்குச் செயல்பாட்டுக் காரணங்களைச் சுட்டியது மலிவுக் கட்டண விமான நிறுவனமான ஸ்கூட்.

மே 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை, 33 ஸ்கூட் விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்பட்டதாக சாங்கி விமான நிலையத்தின் இணையத்தளம் தெரிவித்தது. அவற்றில் சில, தாய்லாந்தின் பேங்காக், மலேசியாவின் கோலாலம்பூர், பிலிப்பீன்சின் மணிலா போன்ற பகுதிகளுக்குச் செல்லவிருந்தன அல்லது அப்பகுதிகளிலிருந்து புறப்படவிருந்தன.

மே 4ஆம் தேதி கனமழை காரணமாக, சாங்கி விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்த 27 விமானங்கள் தாமதமாயின.

புறப்படவிருந்த, சென்றடையவிருந்த 12 ஸ்கூட் விமானங்களின் பயணங்கள் அந்த நாள் ரத்துசெய்யப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடத்திய சோதனையில் தெரியவந்தது.

மே 7ஆம் தேதி நேரம் மாற்றப்பட்ட இரண்டு ஸ்கூட் விமானப் பயணங்கள் ரத்துசெய்யப்படவில்லை.

மே 8ஆம் தேதி ஒரு ஸ்கூட் விமானத்தின் நேரம் மாற்றப்பட்டது. எந்தவொரு விமானப் பயணமும் ரத்துசெய்யப்படவில்லை.

மே 6ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், தனது விமானச் சேவைகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு ஸ்கூட் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்