தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சியாங் ராய், ஒக்கினாவா, தோக்கியோவின் ஹனேடாவுக்கு ஸ்கூட் விமானச் சேவைகள்

2 mins read
4beadf23-c89e-4c15-bbbb-b38be8a2f8c2
ஸ்கூட் விமான நிறுவனத்தின் ஒருவழி ‘இக்கோனமி’ வகை கட்டணங்கள் சியாங் ராய்க்கு $128, ஒக்கினாவாவுக்கு $190, தோக்கியோவுக்கு $190 வெள்ளியிலிருந்து தொடங்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மலிவான விலையில் பயணம் செய்ய விரும்புவோருக்கு இப்போது கூடுதல் தெரிவுகள் உள்ளன.

ஸ்கூட் விமான நிறுவனம் தாய்லாந்தின் சியாங் ராய், ஜப்பானின் ஒக்கினாவா, தோக்கியோவின் ஹனேடா விமான நிலையம் ஆகியவற்றுக்குச் செல்ல மூன்று புதிய விமானச் சேவைகளை அறிவித்துள்ளது.

அந்த மாற்றங்கள் கட்டங்கட்டமாக இவ்வாண்டு டிசம்பர் முதல் 2026ஆம் ஆண்டு மார்ச் வரை மேற்கொள்ளப்படும் என்று ஸ்கூட் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) வெளியான செய்தியாளர் அறிக்கையில் தெரிவித்தது.

இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, ஸ்கூட் தற்போது சிங்கப்பூர் உட்பட 76 இடங்களுக்கு விமானச் சேவைகளை வழங்குகிறது.

ஸ்கூட் விமான நிறுவனத்தின் ஒருவழி ‘இக்கோனமி’ வகை கட்டணங்கள் சியாங் ராய்க்கு $128, ஒக்கினாவாவுக்கு $190, தோக்கியோவுக்கு (ஹனேடா) $190 வெள்ளியிலிருந்து தொடங்கும்.

இந்தப் புதிய இடங்களுக்கான விமானச் சீட்டுகளை, ஸ்கூட்டின் இணையத்தளம், செயலி ஆகியவற்றின் மூலம் வாங்கிக்கொள்ளலாம்.

அதோடு, ஈப்போ, சியாங் மாய், பேங்காக் உள்ளிட்ட வட்டார நகரங்களுக்கான விமானச் சேவைகளும் அதிகரிக்கப்படும் என்று ஸ்கூட் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டிறுதி, புத்தாண்டு விடுமுறை காலகட்டங்களின்போது ஆகாயப் பயணங்களுக்கான தேவை கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால், விமானச் சேவைகள் அதிகரிக்கப்படுவதாக அது தெரிவித்தது.

ஆகஸ்ட் மாதத்திலிருந்து, பேங்காக்கிற்கான விமானப் பயணங்களின் எண்ணிக்கை வாரந்தோறும் 35இலிருந்து 39ஆக அதிகரிக்கும்.

வரும் நவம்பர் மாதத்திலிருந்து, ஈப்போவுக்கான விமானப் பயணங்களின் எண்ணிக்கை வாரந்தோறும் 17இலிருந்து 21ஆக அதிகரிக்கும்.

அதோடு, வரும் டிசம்பரிலிருந்து ஒவ்வொரு வாரமும், சியாங் மாய்க்கான விமானப் பயணங்களின் எண்ணிக்கை ஏழிலிருந்து 14ஆக உயரும்.

விமானச் சேவைகள் குறித்த மேல்விவரங்களுக்கு, www.flyscoot.com இணையத்தளத்திற்குச் செல்லலாம்.

குறிப்புச் சொற்கள்