கடன், பற்று அட்டை செயலாக்கக் கட்டணத்தை ஸ்கூட் விமானச் சேவை நிறுவனம் மீண்டும் அமல்படுத்தியுள்ளது.
ஸ்கூட் விமானங்கள் மூலம் சிங்கப்பூரிலிருந்து பிற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மட்டும் இது பொருந்தும்.
இந்த நடைமுறை பிப்ரவரி 10ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வந்துள்ளது.
பயணச்சீட்டுகளை வாங்க கடன் அல்லது பற்று அட்டைகளைப் பயன்படுத்தும்போது சம்பந்தப்பட்ட வங்கிகள் கட்டணம் வசூலிப்பதால் இந்த அணுகுமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்கூட் திங்கட்கிழமை (பிப்ரவரி 18) தெரிவித்தது.
இத்தகைய கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்று மலிவுக் கட்டண விமானச் சேவைகள் 2019ல் முடிவெடுத்தன.
ஆனால், 2024ல் ஆஸ்திரேலியா, ஜப்பான், தைவான், தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து புறப்படும் விமானங்களுக்கு இந்தக் கட்டணம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது.
இந்தக் கூடுதல் கட்டணம் 1.4 விழுக்காட்டுக்கும் 2.26 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று ஸ்கூட் தெரிவித்தது.