விசாகப்பட்டினம்: சிங்கப்பூரின் மலிவுக் கட்டண விமானமான ஸ்கூட், விசாகப்பட்டினத்தில் உள்ள தனது அனைத்து விமானச் சேவைகளும், 2026 ஜூலை 8ஆம் தேதி முதல் போகபுரத்தில் அமையவிருக்கும் அல்லூரி சீதாராம ராஜு அனைத்துலக விமான நிலையத்திற்கு மாற்றப்படும் என்று அறிவித்துள்ளது. விமான நிலையத்தின் வர்த்தகச் செயல்பாடுகளுக்கு முன்னதாக, விமான நிறுவனம் வெளியிடும் முதல் அதிகாரபூர்வ அறிவிப்பு இது.
தற்போதுள்ள விசாகப்பட்டினம் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் அனைத்து ஸ்கூட் விமானங்களும், இனிமேல் விசாகப்பட்டினம் நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரத்தில் அமையவிருக்கும் புதிய கிரீன்ஃபீல்டு விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் என்று ஸ்கூட் தெரிவித்தது.
புதிய விமான நிலையத்தின் முனையம் 1ல் இருந்து தங்களது பயணப் பதிவு முகப்புகள் செயல்படும் என்றும் விமானம் புறப்படுவதற்கு இரண்டரை மணி நேரத்திற்கு முன்பாக அவை திறக்கப்படும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணப் பதிவு முகப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக, பயணிகள் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு குறைந்தது 120 நிமிடங்களுக்கு முன்பாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
போகபுரம் விமான நிலையத் திட்டம் செயல்பாட்டுக்குத் தயாராகும் நிலையை நெருங்கி வரும் வேளையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி மாதம், புதுடெல்லியிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று இந்த விமான நிலையத்தில் தனது முதலாவது சோதனைத் தரையிறக்கத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
அல்லூரி சீதாராம ராஜு கிரீன்ஃபீல்ட் அனைத்துலக விமான நிலையமாக உருவாக்கப்பட்டு வரும் இத்திட்டம், வட கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் முதன்மை விமானப் போக்குவரத்து மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விமான நிலையத்திலிருந்து தனது செயல்பாடுகள் பற்றி அதிகாரபூர்வமாக அறிவித்த முதல் விமான நிறுவனம் ஸ்கூட் என்பதால், மேலும் பல உள்நாட்டு மற்றும் அனைத்துலக விமான நிறுவனங்கள் விரைவில் தங்களது புதிய திட்டங்களை விவரிக்கும் என விமானப் போக்குவரத்து வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

