ஒவ்வொரு நாட்டின் தற்காப்பு நோக்கமும் மிகவும் நேர்த்தியாக வரையறுக்கப்படுவது என்பது இனியும் தொடராது என்றும் உலகச் சூழலுக்கு ஏற்ற அவற்றை மாற்றி அமைக்க வேண்டியிருக்கும் என்றும் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம், புவிசார் அரசியல் ஆகியன உலக அளவில் ஏற்படுத்தி இருக்கும் சவால்கள் பாதுகாப்புச் சவால்களைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது பாதுகாப்புப் பணி என்பது சிக்கல்கள் நிறைந்ததாகத் தோன்றினாலும் அதன் மூலம் அதிகமான பங்காளித்துவ நாடுகளுடன் இணைந்து பங்காற்றும் புதிய வாய்ப்புகள் சிங்கப்பூருக்குக் கிடைக்கும் என்றார் அவர்.
பல்வேறு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட அமைச்சர்நிலை வட்டமேசை ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் திரு சான் செய்தியாளர்களிடம் பேசினார்.
தற்காப்பு, பாதுகாப்பு ஆகியவற்றைக் கடந்த காலத்தைப்போலப் புவியியல் அடிப்படையில் வகுக்கும் முறை இனியும் நீடிக்காது என்பதே ஆலோசனையின் முக்கிய அம்சமாக இருந்தது என்றார் திரு சான்.
தங்கள் நாட்டின் பாதுகாப்பு முறை ஆசிய பசிபிக் நாடுகளோடு பின்னிப் பிணைந்துள்ளதாக ஐரோப்பிய அமைச்சர்களும் அதே கருத்தை ஆசிய பசிபிக் அமைச்சர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்ததாக அவர் கூறினார்.
குறிப்பாக, தற்போது நிலவும் சவால்களை எதிர்கொள்வது என்பது நீண்டகால முயற்சியாக நீடிக்கும் என்றும் அதற்கு நாடுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும் திரு சான் தெரிவித்தார்.
அமைச்சர்நிலை வட்டமேசை ஆலோசனைக் கூட்டம் என்பது ஷங்ரிலா கலந்துரையாடலின் ஒரு பகுதியாக நடத்தப்படுவது வழக்கம்.
தொடர்புடைய செய்திகள்
பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள் அந்த நண்பகல் உணவுக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை நடத்துவர்.

