பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் (சிஜகூ) வேட்பாளர்கள், அதிகமான குடியிருப்பாளர்களைச் சென்றடையும் கடைசி நேர முயற்சியாக பாசிர் ரிஸ் நகரில் நடைப்பயணத்தின் மத்தியில், இணையவழி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டனர்.
கட்சித் தலைமைச் செயலாளர் டெஸ்மண்ட் லிம் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு, லோயாங் பாயிண்ட் கடைத்தொகுதியில் உள்ள மெக்டோனல்ட்ஸ் உணவகத்தில் அமர்ந்து, நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கட்சியின் திட்டங்கள் குறித்த வாக்காளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க இரண்டு தொலைபேசிகளையும் ஒரு மடிக்கணினியையும் பயன்படுத்தினர்.
பாசிர் ரிஸ்-சாங்கி குழுத்தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியின் தகவல் தொடர்புத் தலைவர் ஹர்மிந்தர் சிங், “நாங்கள் இணையம் வழியாக வாக்காளர்களைச் சந்திக்கும் முயற்சியாக இந்த அணுகுமுறையைக் கையாள்கிறோம்,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“நேரடிப் பேரணிகளைச் செய்வது போலல்லாமல், இந்த நேரடி அமர்வுகளை ஆவணப்படுத்தி பின்னர் அதிகமான வாக்காளர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.
சக்கரநாற்காலியைப் பயன்படுத்தும் திரு சிங், “இதுவரை தங்கள் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் நன்கு போய்கொண்டிருக்கிறது. எங்கள் கருத்துகளை வாக்காளர்கள் ஆர்வத்துடன் கேட்கிறார்கள். இணையவழி பிரசாரத்தில் அவர்கள் கலந்துகொண்டு பல கேள்விகளை எங்களிடம் கேட்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.

