தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிஜக ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகம்

3 mins read
47169553-e0ba-4256-81e0-cb6be95cf91f
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கட்சித் தலைவர் பால் தம்பையா. - பட: ரவி சிங்காரம்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக) அதன் 45வது ஆண்டுநிறைவை ஆகஸ்ட் 6ஆம் தேதி கொண்டாடவிருக்கிறது.

அதை முன்னிட்டு, 2030ஆம் ஆண்டு வரையிலான அதன் ஐந்தாண்டுத் திட்டம் கட்சித் தலைமையகத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) அறிமுகம் கண்டது.

“தற்போதைய பொதுத் தேர்தல் வழிமுறையில் மக்கள் செயல் கட்சி தோற்காது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

“ஆனால் ஏதேனும் ஒன்றைச் செய்ய முடியாவிட்டால் சிஜக அதைச் செய்யும். அதை எப்படிச் செய்யப் போகிறோம் என்பதைத்தான் இன்று காட்டுகிறோம்,” என்றார் கட்சித் தலைவர் டாக்டர் பால் தம்பையா.

ஐந்தாண்டுத் திட்டம் ஐந்து குறிக்கோள்களைக் கொண்டுள்ளது.

முதலாவது, சாதாரண சிங்கப்பூரர்களின் நலன்கள், உரிமைகள் - விலைவாசி உயர்வு, வீட்டு விலை, ஊழியர்களின் உரிமைகள்.

இரண்டாவது, கூடுதல் ஜனநாயகப் போக்குடன், திறந்த அரசியல் கட்டமைப்பு - அச்சமின்றி வாக்களித்தல், சுதந்திரமான ஊடகங்கள்.

அடுத்து, சமூகத்தை ஈடுபடுத்தல், நம்பிக்கை வளர்த்தல்.

தொடர்புடைய செய்திகள்

நான்காவதாக, எதிர்காலத்துக்குத் தயாரான தலைமைத்துவம், மீள்தன்மை.

இறுதியாக, தரவு அடிப்படையிலான கொள்கைத் தீர்வுகள்.

ஐந்தாண்டுத் திட்டத்தின் ஐந்து குறிக்கோள்களை அடைய, நான்கு முக்கியத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

முதலாவதாக, சீர்திருத்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் அத்திட்டத்தின் இணை மேலாளர் அரிஃபின் ‌‌‌ ஷா.

“தொகுதிகள் காணாமற்போன பின்பு தேர்தல் எல்லைகள் பற்றிப் பேசிப் பயனில்லை. அதனால் இப்போதே தொடங்குகிறோம். எதிர்க்கட்சிகள், சிவில் சமூக அமைப்புகள், கல்வியாளர்கள் அடங்கிய தேர்தல் சீர்திருத்தக் கூட்டணியை அமைப்போம்.

“பிடிஓ வீடுகள் எங்கு கட்டப்படுகின்றன என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. அதனால் ஓராண்டுக்கு முன்பே தேர்தல் தொகுதி எல்லை அறிக்கையை வெளியிடலாமே,” என்றார் அரிஃபின்.

வாக்களிப்பு வயதை 21லிருந்து 18க்குக் குறைப்பது, வெளிநாட்டு வாக்களிப்புக் கட்டமைப்பு ஆகியவை குறித்தும் சிஜக பேசும் என்றார் அவர்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி, தேர்தல் சீர்திருத்தம் பற்றிய தன் முதல் பொதுக் கல்வி மாநாட்டை சிஜக நடத்தும்.

இரண்டாவதாக, அரசியல் சார்பற்ற சமூகக் கூட்டணிகளைத் தொடங்கி, சமூகத்தினரைத் தெளிவான நெறிகளோடு சிஜக சிந்திக்கவைக்கும்.

“சிங்கப்பூரில் பெரும்பாலோர் அரசியல் மீது நாட்டம் கொண்டவர்கள் அல்லர். அதனால் சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மைக்குப் பதிலாக நமக்குத் தற்காலிகமாகப் பயனளிப்பவற்றைத் தேர்ந்தெடுக்கிறோம். இதை மாற்றத்தான் இத்திட்டத்தைத் தொடங்குகிறோம்,” என்றார் திட்டத்தின் இணை மேலாளர் சேவியர்.

“நீங்கள் மசெக உறுப்பினராக இருந்தாலும் சரி, மற்ற கட்சி உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, இந்தச் சமூகக் கூட்டணிகளில் இணையலாம்,” என்றார் சேவியர். ஒவ்வொரு கூட்டணியிலும் 10, 20 பேர் இருப்பர்.

மூன்றாவதாக, சிஜக பெண்கள் பிரிவு. கொள்கைகள் பற்றிப் பெண்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பெண் தலைவர்களின் வளர்ச்சிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

“’பெண்களை ஆற்றல்படுத்துதல்’ எனும் இயக்கத்தைத் தொடங்குவோம். பெண்களின் கதைகளை இதில் விவரிப்போம். மாதாந்தரப் பயிலரங்குகள், நிகழ்ச்சிகளையும் நடத்துவோம்,” என்றார் திட்டத்தின் இணை மேலாளர் ஜூடி டே.

இளம் ஜனநாயகர்கள் சந்திப்பு மாதாமாதம் நடைபெறுகிறது. பொதுத் தேர்தலையடுத்துப் பலரும் இதில் இணைந்துள்ளனர். 2025ன் மூன்றாம் காலாண்டில் விலங்கு நலன் பற்றிய ஆய்வறிக்கையை சிஜக வெளியிடும். ஆண்டுக்கு இருமுறை இத்தகைய அறிக்கையை வெளியிடுவதே நோக்கம் என்றார் இத்திட்டத்தின் இணை மேலாளர் ‌‌ஷவால் இயோ.

குறிப்புச் சொற்கள்