கட்டுப்படியான வீட்டு விலைகள் குறித்து இந்தியச் சமூகம் அக்கறைப்படுவதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் கொமெஸ் தெரிவித்திருக்கிறார்.
“வீட்டுரிமைப் பற்றி பேசும்போது விலைகளே முக்கியக் கவலையாக உள்ளது. இந்தியர்கள் வீடுகளைத் தங்கள் மனத்திற்கு நெருக்கமானதாகக் கருதுகின்றனர். அவர்கள் வீடுகளை மற்ற விற்பனைப் பொருள்களைப் போலச் சாதாரணமாகக் கருதுவதில்லை,” என்று அவர் கூறினார்.
செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் திரு கோமெஸ், வெள்ளிக்கிழமை (மே 1) காலை தொகுதி உலா மேற்கொண்டதற்கு முன்பு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
வீட்டு விலைகளிலிருந்து நில விலையை நீக்கும் பொதுச்சந்தையற்ற திட்டம் இந்தியர்களுக்கு, குறிப்பாக வசதி குறைந்தவர்களுக்குப் பயனளிக்கும் என்றும் திரு கோமெஸ் கூறினார்.
பலருக்குக் கட்டுப்படியான விலைகளில் வீடுகள் தரப்பட்டால் நாங்கள் இறக்கும் வரையில் அங்கு இருப்போம். “அதுதான் இந்தியச் சமூகம். இந்திய நாடித்துடிப்பை வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் கொள்கைகள் புரிந்துகொள்ளவில்லை என நினைக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத்திற்குத் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால், வயதானோருக்குக் கூடுதல் சலுகைகளைக் கேட்கப்போவதாகவும் கூறினார். “முதியோருக்கான கட்டணக்கழிவுகள் போதவில்லை. அவர்களில் பலர் தொடர்ந்து தங்கள் சொந்தக் காசைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்,” என்று திரு கோமெஸ் கூறினார்.
அத்துடன், மக்களின் கருத்துகளைத் திரட்டுவதற்காக நடத்த கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் சுவானின் யோசனையைச் செயல்படுத்தப் போவதாகத் திரு கோமெஸ் கூறினார்.
“நம் யோசனைகளுக்கான வட்டாரவாசிகளின் வரவேற்பு பெருகி வருகிறது. மாற்றத்திற்கான அறைகூவலும் சத்தத்துடன் ஒலிக்கிறது,” என்றார் திரு கோமெஸ்.

