ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கின் கடலோரப் பகுதிகளில் அனைத்து விதமான நீர் விளையாட்டுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் சிங்கப்பூர் கடல்பகுதியில் 400 டன்னுக்கும் அதிகமான எண்ணெய் கடலில் கசிந்தது. அதனால் சிங்கப்பூர் கடற்கரைகளில் எண்ணெய்ப் படலங்கள் அதிக அளவில் காணப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கடல் பகுதிகள் மூடப்பட்டன. அதன் பின்னர் அவை கட்டங்கட்டமாகப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.
இந்நிலையில், ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் நீரின் தரம் வழக்கநிலைக்கு திரும்பியுள்ளது. அதனால் நீச்சல், அலையாடல் உள்ளிட்ட அனைத்துவித விளையாட்டுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 27) பதிவிட்டார்.
“ நமது தூய்மையான சுற்றுச்சூழலை ஒருபோதும் கவனக்குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டாம். பொது இடங்களை தொடர்ந்து தூய்மையாகவும் பசுமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி நெதர்லாந்துக் கொடி தாங்கிய ‘வோக்ஸ் மாக்ஸிமா’ படகு, சிங்கப்பூர்க் கொடி தாங்கிய எண்ணெய் கப்பலான ‘மரின் ஆனர்’ மீது மோதியதில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.
அலை நீரோட்டத்தால் செந்தோசா, ஈஸ்ட் கோஸ்ட் பார்க், லேப்ரடோர் வனப்பகுதி, தென் தீவுகள், மரினா சவுத் படகுத்துறை ஆகிய பகுதிகளை எண்ணெய்க் கசிவு சென்றடைந்தது.
அதன்பின்னர் எண்ணெய்க் கசிவுத் துப்புரவு பணிகள் மூலம் அகற்றப்பட்டது.

