சீ நிறுவனத்தின்கீழ் செயல்படும் ஷாப்பி தளம் அனைத்துலக அளவில் நூற்றுக்கணக்கான மென்பொருள் உருவாக்குநர் பணிகளைக் குறைத்துவருவதாக அறியப்படுகிறது.
உலக அளவில் பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அவற்றின் வேலையிடங்களில் அதிகரிப்பதுடன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய சேவைகளை உருவாக்குகின்றன.
அவ்வகையில் ஷாப்பியில் இந்த வாரம் தொடங்கி மென்பொருள் உருவாக்குநர் பணிகள் கட்டங்கட்டமாகக் குறைக்கப்படுவதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
அது, ஷாப்பி மென்பொருள் உருவாக்குநர் வல்லுநர்கள் அடங்கிய ஊழியரணியில் கிட்டத்தட்ட 8 விழுக்காடு என்று அறியப்படுகிறது.
தற்போதைக்கு, தரநிலையை உறுதிசெய்வோரின் பணிகள் பாதிக்கப்படலாம் என்று குறிப்பிட்ட தகவல் அறிந்த வட்டாரங்கள், கூடுதல் பணிகள் குறைக்கப்படலாம் என்றன.
உலக அளவில் பல நிறுவனங்கள் கொவிட்-19 பெருந்தொற்றின்போது தீவிரமாக ஊழியர்களைப் பணியமர்த்தின. இணையப் பயன்பாடும் மின்னிலக்க நடவடிக்கைகளும் தலைதூக்கிய அந்தக் காலகட்டத்தில் தாக்குபிடிக்க அவை திணறின.
செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டால் உற்பத்தி வெகுவாக உயர்ந்துள்ளது என்பதைத் தற்போதைக்குத் தெளிவாக நிரூபிக்க முடியாவிட்டாலும் பல நிறுவனங்கள் குறைவான வளங்களைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்க முயல்கின்றன.
சீ நிறுவனம் அவ்வப்போது அதன் செயல்பாடுகளை மறுஆய்வு செய்து ஊழியர்களின் எண்ணிக்கையை அதற்கேற்றவாறு மாற்றியமைக்கிறது என்றார் நிறுவனப் பேச்சாளர்.
தொடர்புடைய செய்திகள்
“இத்தகைய முடிவுகள் பலமுறை ஆலோசித்த பிறகே எடுக்கப்படுகின்றன. மாற்றத்தால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதில் உறுதியாக இருக்கிறோம்,” என்றார் அந்தப் பேச்சாளர்.
சீ நிறுவனம், இதுவரை சிறிய வழிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திவருகிறது. ஷாப்பி தளத்தில் பொருள்களைப் பரிந்துரைக்கவும் விற்பனை கருவிகளாகவும் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம், கூகல் நிறுவனத்துடன் இணைந்து தனது செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்கத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் கூறியிருந்தது.

