தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் கடலாமைக் கூடுகள் ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சம்

1 mins read
3f277792-8b0a-40b3-b1c1-6d78d15763e3
2025 ஆகஸ்ட் 23ஆம் தேதி, சிஸ்டர்ஸ் தீவுகள் கடற்பூங்காவில் ஆமைக் குஞ்சுகள் பொரித்து, கடலில் விடப்படுவதற்கு முன் அளவிடப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள கடற்கரைகளில் அழியும் அபாயத்தில் உள்ள ‘ஹாக்ஸ்பில்’ ஆமைகளுக்குச் சாதகமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. இவ்வாண்டு கண்டறியப்பட்ட ஆமைக் கூடுகளின் எண்ணிக்கை, கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.

இந்த ஆண்டின் இனப்பெருக்க காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில், இதுவரை 18 கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது, 2021 முதல் 2024 வரை ஒவ்வோர் ஆண்டும் சராசரியாகக் கண்டறியப்பட்ட 11 கூடுகளைவிட அதிகமாகும் என தேசியப் பூங்கா கழகத்தின் தேசிய பல்லுயிர் மையத்தின் இயக்குநர் டாக்டர் கேரன் துன் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து இதுவரை எந்தப் போக்கும் கண்டறியப்படவில்லை என்று கழகம் கூறியது.

‘ஹாக்ஸ்பில்’ ஆமைகள், அவற்றின் பருந்து போன்ற அலகுக்காக அவ்வாறு அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் வெப்பமண்டலக் கடல்களில் காணப்படுகின்றன. இவை கடற்பஞ்சுகளை உண்பதன் மூலம் பவளப்பாறைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இதனால் பவளங்கள் மெதுவாக வளர நேரம் கிடைக்கிறது.

இருப்பினும், இந்த ‘ஹாக்ஸ்பில்’ ஆமைகள், கூடு கட்டும் கடற்கரைகள் அழிப்பு, நில மீட்பு, பிற நிலப் பயன்பாடுகள், கடல் மாசுபாடு, சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் உட்பட மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

குறிப்புச் சொற்கள்