சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் வரும் ஜனவரி 9ஆம் தேதியிலிருந்து சீனப் புத்தாண்டு காலம் வரை 15 பிரபல கடல் உணவு வகைகள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி விற்கப்படும் என ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை (ஜனவரி 9) தெரிவித்தது.
பண்டிகைக் காலத்தில் இதுபோன்ற உணவு பொருள்களை மலிவு விலையில் பொதுமக்களுக்கு வழங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஃபேர்பிரைஸ் குழுமம் கூறியது.
சிங்கப்பூரர்கள் அதிகரித்துவரும் செலவினங்களைச் சமாளிக்க உதவும் வகையில் இதுபோன்ற நடவடிக்கையில் இக்குழுமம் முந்தைய ஆண்டுகளிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
விலையில் மாற்றமின்றி விற்கப்படும் கடல் உணவு வகைகளான இறால், வௌவால் மீன், சங்கரா மீன் ஆகியவையும் காய்கறிகளில் குறிப்பிட்ட வகைக் காளான், கீரை போன்றவையும் அடங்கும்.
இப்பட்டியலில் இவ்வாண்டு புதிதாக பன்றி இறைச்சி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வகை உணவுப்பொருள்கள் பொதுமக்களிடையே பிரபலமாக இருப்பதால் இவ்வாண்டு இது சேர்க்கப்பட்டுள்ளதாக ஃபேர்பிரைஸ் குழும இயக்குநர்களில் ஒருவரான திரு ஆண்டி சாங் கூறினார்.
“சீனப் புத்தாண்டு காலத்தின்போது ஈரச்சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அதன் விலையில் சற்று ஏற்றம் காணும் என்பதை நாங்கள் அறிவோம்,” எனக் குழுமம் குறிப்பிட்டது.
“பண்டிகைக் காலங்களில் பொருள்களுக்கான தேவை அதிகரிப்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதனால், பிரபலமான சில உணவுப் பொருள்களின் விலை சற்று உயர்கிறது. இந்த விலையுயர்வு எங்கள் வாடிக்கையாளர்களை பாதிக்காதவாறு அவர்களுக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட பிரபலமான சில பொருள்களின் விலையில் மாற்றமின்றி சீனப் புத்தாண்டு காலங்களில் விற்பனைசெய்ய நாங்கள் முடிவுசெய்தோம். இதன்மூலம் வாடிக்கையாளர்களின் பண்டிகை காலத்தைச் சிறப்பாக மாற்ற முடியும் என நாங்கள் நம்புகிறோம்,” என ஃபேர்பிரைஸ் குழும தலைமை அதிகாரி திரு விபுல் சாவ்லா கூறினார்.
இவ்வாண்டுச் சலுகை சீனப் புத்தாண்டின் கடைசி நாளான பிப்ரவரி 12ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும் எனக் குழுமம் சொன்னது.