தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நாடாளுமன்ற நாயகராக சியா கியன் பெங் முன்மொழிவு, நாடாளுமன்றத் தலைவராகத் தொடரும் இந்திராணி ராஜா

2 mins read
3a95a0eb-9a46-494e-825d-bc9645f1d83f
பிரதமர் அலுவலக அமைச்சராக இந்திராணி ராஜா (வலது) 2020 முதல் செயல்பட்டு வருகிறார். சியா கியன் பெங், நாடாளுமன்ற நாயகராக 2023 முதல் செயல்பட்டு வருகிறார். - படங்கள்: சாவ் பாவ், தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

செப்டம்பர் 5ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் மீண்டும் தொடங்கும்போது திரு சியா கியன் பெங், நாடாளுமன்ற நாயகராக மீண்டும்  முன்மொழியப்படுவார் என்று பிரதமர் அலுவலக அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தெரிவித்தது.

தற்போது நாடாளுமன்ற நாயகராகப் பதவி வகிக்கும் திரு சியா, 2023 முதல் அந்தப் பதவியில் செயல்பட்டு வருகிறார்.

பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, நாடாளுமன்றத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக அமைச்சு கூறியுள்ளது.

தற்காப்பு, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது தொடர்ந்து துணைத் தலைவராக இருப்பார். 

நாடாளுமன்ற நாயகரும் தலைவரும் வழக்கமாக பிரதமரால் முன்மொழியப்படுவர். ஆனால் நாடாளுமன்ற நாயகரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்ய வேண்டும். இரண்டு பதவிகளுக்கும் தவணைக்கால வரையறை இல்லை. 

நாடாளுமன்ற செயல்பாட்டிற்குத் தலைமை தாங்கும் நாடாளுமன்ற நாயகர்,மன்றத்தையும் மன்ற அலுவலகத்தையும் செம்மையாக வழிநடத்துவதை உறுதி செய்வார்.. விவாதங்ககளில் யார் பங்கேற்பது, கேள்விகளை முன்வைப்பது என்ற முடிவுகளை அவர் எடுக்க வேண்டும். 

மற்ற நாடாளுமன்றங்களுடனான உறவுகளைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதிக்கும் நாடாளுமன்ற நாயகர், இங்கு வருகை அளிக்கும் வெளிநாட்டுப் பிரமுகர்களையும் வரவேற்கும் பொறுப்பைக் கொண்டவர்.

தேசிய நிகழ்ச்சிகளிலும் அதிகாபூர்வ வெளிநாட்டுப் பயணங்களிலும் அவர் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதிப்பார்.

நாடாளுமன்றத் தலைவர், அரசாங்க பணிகளுக்கும் நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் திட்டப்பணிக்கும் ஏற்பாடு செய்வதற்குப் பொறுப்பானவர். 

நாடாளுமன்றத்தில் செயல்முறை சார்ந்த விவகாரங்கள் எழுந்தால் அதற்குத் தகுந்த நடவடிக்கைகளையும் அத்தலைவர் முன்மொழிவார். 

நாடாளுமன்ற அமர்வை வழக்கமான நேரத்தைத் தாண்டி நீட்டிப்பது போன்ற நடவடிக்கைகளையும் நாடாளுமன்றத் தலைவர் பரிந்துரைப்பார்.

பொதுத் தேர்தலுக்குப் பிந்திய புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர், வழக்கமாக நாடாளுமன்ற நாயகருக்கான தேர்தலுடன் தொடங்கும். இது, செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெறும்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு தமது ஃபேஸ்புக் பதிவில், திரு. சியா, பிரதமர் தம் மீது வைத்துள்ள நம்பிக்கை, ஆதரவு மற்றும் நியமனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த கால மற்றும் நிகழ்கால எம்.பி.க்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும், நாடாளுமன்றச் செயலகத்தைச் சேர்ந்த தனது இரண்டு பிரதிநிதிகள் மற்றும் சகாக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்